Last Updated : 29 Jun, 2025 03:04 PM

 

Published : 29 Jun 2025 03:04 PM
Last Updated : 29 Jun 2025 03:04 PM

ஃபேஸ்புக் பயனர்கள் கவனத்துக்கு: போனில் உள்ள போட்டோக்களை ஸ்கேன் செய்யும் மெட்டா ஏஐ?

நியூயார்க்: மெட்டா நிறுவனத்தின் ஏஐ பிரிவான ‘மெட்டா ஏஐ’-க்கு ஃபேஸ்புக் பயனர்கள் தங்கள் போனில் உள்ள புகைப்படங்களை அக்சஸ் செய்வதற்கான அனுமதியை வழங்கினால் ‘கிளவுட் பிராசஸிங்’ என்ற பெயரில் மொத்தமாக அந்த படங்களை ஸ்கேன் செய்து கிளவுடில் ஸ்டோர் செய்துவிடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மெட்டா நிறுவனம் தொடர்ச்சியாக அதன் பயனர்களின் பிரைவசி சார்ந்த விவகாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் பயனர்களின் தரவுகளை கொண்டு தங்களது ஏஐ மாடலுக்கு பயிற்சி அளிப்பதாக நம்பப்படுகிறது. இந்நிலையில், ஃபேஸ்புக்கில் பயனர்கள் அப்லோட் செய்யாத படங்களை கூட மெட்டா ஏஐ ஸ்கேன் செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை தொழில்நுட்பம் குறித்த செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வரும் ‘டெக் கிரன்ச்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில் ஃபேஸ்புக் பயனர்கள் சிலர் ஸ்டோரி அப்லோட் செய்ய முயன்றபோது ஒரு ‘பாப் அப்’ நோட்டிபிகேஷன் வந்ததாகவும். அதில் கிளவுட் பிராசஸிங் என்ற அம்சத்துக்கு மெட்டா பயனர்களுக்கு அழைப்பை விடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் பயனர்களின் போன்களில் உள்ள போட்டோக்கள் தானியங்கு முறையில் சீரான இடைவெளியில் மெட்டா கிளவுட் ஸ்டோரேஜூக்கு தானாகவே (Automatic) அப்லோட் செய்யப்படும் என்றும். இதன் மூலம் ‘பிறந்த நாள்’ மாதிரியான நிகழ்வுகள், ஏஐ மூலம் ஜெனரேட் செய்யப்பட்ட ஃபில்டர்கள், போட்டோ கொலாஜ் மாதிரியான கிரியேட்டிவ் ஐடியாவை மெட்டா ஏஐ பயனர்களுக்கு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இது பாதுகாப்பானது என பயனர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பயனர்கள் அப்லோட் செய்யாத படங்களையும் மெட்டா ஏஐ அக்சஸ் செய்யும் என தெரிகிறது. இருப்பினும் இது பயனர்கள் தேர்வு தான் என்றும். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த அம்சத்தை டிசேபிள் செய்யலாம் என்றும் மெட்டா தெரிவித்துள்ளது. ஆனாலும் இந்த அம்சம் பயனர்களின் பிரைவசிக்கு சங்கடம் தரும் வகையில் அமைந்துள்ளது.

இதற்கு முன்பு கடந்த 2007 முதல் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாவில் சிறார் அல்லாத பயனர்கள் (Adult) பதிவேற்றம் செய்த கன்டென்டுகளை கொண்டு தங்கள் ஏஐ மாடலுக்கு பயிற்சி அளித்ததாக மெட்டா ஒப்புக் கொண்டது. இருப்பினும் அது குறித்து தெளிவான விளக்கத்தை அப்போது தரவில்லை.

‘கிளவுட் பிராசஸிங்’ அம்சத்தை பயனர்கள் ஆஃப் செய்தால் மெட்டா கிளவுடில் சேகரிக்கப்பட்ட படங்களும் 30 நாட்களில் நீக்கப்படும் என மெட்டா தெரிவித்துள்ளது இப்போதைக்கு ஆறுதல். மேலும், தற்போது தங்கள் ஏஐ சாட்பாட்டுக்கு இந்த படங்களை கொண்டு பயிற்சி எதுவும் அளிக்கப்படவில்லை என மெட்டா தரப்பு நிர்வாகிகள் கூறியுள்ளனர். எதிர்காலத்தில் இந்த படங்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு அவர்கள் மவுனம் காத்தனர். அதனால் பயனர்கள் கவனத்துடன் மெட்டா சமூக வலைதளங்களை பயன்படுத்த வேண்டி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x