Last Updated : 20 Jun, 2025 02:20 PM

 

Published : 20 Jun 2025 02:20 PM
Last Updated : 20 Jun 2025 02:20 PM

16 பில்லியனுக்கும் அதிகமான பாஸ்வேர்டுகள் கசிவு: டெக் வல்லுநர்கள் சொல்வது என்ன?

புதுடெல்லி: ஆன்லைனில் சுமார் 16 பில்லியனுக்கும் அதிகமான பாஸ்வேர்டுகள் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது இணைய பாதுகாப்பு சார்ந்த அத்துமீறலில் மிகப்பெரிய தரவு கசிவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்த கசிவு மில்லியன் கணக்கான இணைய பயனர்களின் தனிப்பட்ட தரவுகளுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக துறை சார்ந்த வல்லுநர்கள் கருதுகின்றனர். இதனால் இணையதள பயனர்களின் கணக்குகளை ஹேக் செய்வது, அவர்களது அடையாளங்களை களவாடுவது, பிஷ்ஷிங் மோசடி போன்ற அச்சுறுத்தல் இருப்பதாக தகவல்.

இது பல ஆண்டுகாலமாக டார்க் வெப்பில் கிடைக்கும் பழைய தரவுகள் இல்லை என்றும், ‘இன்போஸ்டீலர்கள்’ எனப்படும் மால்வேர் மூலம் இந்த தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இதில் பயனர் பெயர் மற்றும் பாஸ்வேர்டு போன்றவை பயனர்களின் சாதனங்களில் இருந்து சேகரிக்கப்பட்டு, ஹேக்கர்கள் வசம் சென்றுள்ளது. அதை கொண்டு சம்பந்தப்பட்ட பயனர் கணக்கில் லாக்-இன் செய்வது அல்லது அதை டார்க் வெப்பில் விற்பனை செய்வது போன்றவற்றை செய்துள்ளனர்.

என்னென்ன தரவுகள் கசிந்துள்ளன? - தற்போது கசிந்துள்ள இந்த தரவுகளில் பயனர்களின் லாக்-இன் விவரம் கசிந்துள்ளது. அதாவது மின்னஞ்சல் முதல் சமூக வலைதளம் வரையில் கூகுள், ஃபேஸ்புக், டெலிகிராம், டெவலப்பர்களின் ஜிட்ஹப் கணக்குகள் மற்றும் சில அரசு தளங்களின் விவரங்கள் இதில் கசிந்துள்ளன. அதுவும் சம்பந்தப்பட்ட தளத்துக்கான லிங்க், அதன் பயனர் விவரம், பாஸ்வேர்டு உள்ளிட்டவை முறையாக ஹேக்கர்கள் வசம் கிடைத்துள்ளதாக தகவல்.

30 பெரிய டேட்டா செட்களாக இது டார்க் வெப்பில் அப்லோட் செய்யப்பட்டுள்ளது. ‘உலகளாவிய சைபர் குற்றத்துக்கான ப்ளூ பிரிண்ட்’ என வல்லுநர்கள் இந்த தரவு கசிவினை கூறி வருகின்றனர்.

பயனர்கள் என்ன செய்ய வேண்டும்? - இது மாதிரியான தரவு கசிவில் இருந்து தப்பிக்க இணையதள பயனர்கள் தங்களது கணக்கு சார்ந்த பாஸ்வேர்டை வலுவானதாகவும், தனித்துவம் வாய்ந்ததாகவும் வைக்க வேண்டும். மேலும், டூ ஃபேக்டர் ஆத்தென்டிகேஷன் மற்றும் பாஸ்வேர்டு மேனேஜர் செயலி போன்றவற்றை பயன்படுத்தலாம் என வல்லுநர்கள் கூறியுள்ளனர். மேலும், டார்க் வெப் கசிவு சார்ந்த கண்காணிப்பு டூல்களை பயனர்கள் பயன்படுத்தலாம் எனவும் கூறியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x