Published : 20 Jun 2025 08:48 AM
Last Updated : 20 Jun 2025 08:48 AM
கேம்பிரிஜ்: சாட்ஜிபிடி ஏஐ சாட்பாட் பயன்பாடு காரணமாக மனிதர்களின் சிந்திக்கும் திறன் மட்டுப்படுத்தப்படுவதாக அமெரிக்காவில் உள்ள எம்ஐடி பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் கண்டறிந்துள்ளது. அந்த ஆய்வில் தெரியவந்துள்ள தகவல் குறித்து விரிவாக பார்ப்போம்.
இன்றைய ஏஐ சூழ் உலகில் பெரும்பாலும் டிஜிட்டல் பயனர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களுக்கான விடையை அறிவது ஏஐ திறன் கொண்ட பாட்களிடம் தான். ‘சந்தையில் விற்பனையாகும் பைக்குகளில் ‘சிறந்த சிசி’ திறன் கொண்ட பைக் முதல் அட்வான்ஸ்டு கம்யூட்டிங் வரை’ என அனைத்து சந்தேகங்களுக்கும் நாடுவது ஏஐ துணையைதான்.
ஒரு பக்கம் மென்பொருள் நிறுவனங்கள் ஏஐ வரவு காரணமாக ஆட் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் அச்சுறுத்தல் நிலவுகிறது. மறுபக்கம் சாமானிய மக்கள் கூட தங்களது அன்றாட வாழ்வில் ஏஐ உதவியை நாடும் நிலை உள்ளது. தனிமையில் தவிக்கும் நபர் ஒருவர் ஏஐ உடன் ‘சேட்’ செய்யும் சம்பவங்களும் கூட அரங்கேறுவது உண்டு.
இந்நிலையில் தான் ஏஐ சாட்பாட் பயன்பாடு காரணமாக மனிதர்களின் சிந்திக்கும் திறன் மட்டுப்படுத்தப்படுவதாக எம்ஐடி ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக மாணவர்கள் இடத்தில் இது அதிகம் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இதற்காக 18 முதல் 39 வயது வரையிலான நபர்களிடம் ஆய்வு மேற்கொண்டுள்ளது எம்ஐடி குழு. மொத்தம் 54 பேர் இதில் பங்கேற்றுள்ளனர். மூன்று குழுக்களாக அவர்கள் பிரிக்கப்பட்டனர். அவர்கள் எல்லோரிடமும் எஸ்ஏடி பாணியில் கட்டுரை எழுதுமாறு ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதற்கு ஏஐ சாட்பாட், கூகுள் சேர்ச் அல்லது எதுவும் இல்லாமல் சுயமாக எழுதலாம் என மூன்று ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், எலக்ட்ரோஎன்செபலோகிராபி (EEG) மூலம் ஆய்வில் பங்கேற்றவர்கள் மூளைச் செயல்பாட்டை ஆய்வாளர்கள் கண்காணித்தனர். குறிப்பாக கட்டுரை எழுதுபவர்களின் அறிவாற்றல் ஈடுபாட்டை மதிப்பிடுவதற்காக மூளையில் உள்ள 32 வெவ்வேறு பகுதிகளை ஸ்கேன் செய்தனர்.
இந்த ஆய்வின் முடிவுகள் கவலை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதாவது ஏஐ பாட் உதவியை பயன்படுத்தியவர்களின் மூளையின் செயல்பாடு மிகக் குறைவாகவே இருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது. பெரும்பாலானவர்கள் ஏஐ கொடுத்த கன்டென்டை அப்படியே காப்பி மற்றும் பேஸ்ட் செய்துள்ளனர். அதை தங்களது சிந்திக்கும் திறன் மூலம் மொழி நடை ரீதியாகவோ அல்லது தங்கள் பாணிக்கோ ஏற்ற வகையில் கட்டுரையை மாற்றம் செய்ய தவறியுள்ளனர் என கண்டறியப்பட்டது. அதுவே ஏஐ டூல்களை பயன்படுத்தாதவர்களின் மூளையின் சிந்திக்கும் திறன் சிறப்பாக இருந்துள்ளது. இதில் கூகுள் சேர்ச் மாதிரியான டூல்களை பயன்படுத்தியவர்களும் அடங்குவர்.
சாட்ஜிபிடி-யை பயன்படுத்திய கட்டுரை எழுதியவர்களின் நீண்டகால கற்றல் திறன் மற்றும் மூளையின் சிந்திக்கும் திறன் பாதிக்கும் என்று இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்கள் இதன் மூலம் கண்டறிந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT