Published : 10 Mar 2025 10:23 PM
Last Updated : 10 Mar 2025 10:23 PM
உலகம் முழுவதும் எக்ஸ் தளம் (ட்விட்டர்) மீண்டும் முடங்கியுள்ளது. ஒரே நாளில் மூன்றாவது முறையாக முடங்கியதால் பயனர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சமூக வலைதளங்கள், இணையதளங்களின் முடக்கங்களை கண்காணிக்கும் Downdetector.com தரவுகளின் படி இன்று (மார்ச்10) பிற்பகல் 3.30 மணியளவில் முதல்முறையாக எக்ஸ் தளம் முடங்கியது. சில மணி நேரங்களில் பிரச்சினை சரிசெய்யப்பட்ட நிலையில் மீண்டும் மாலை 7 மணிக்கு எக்ஸ் தள செயல்பாடுகள் முடங்கின. அதன்பிறகு மீண்டும் சரிசெய்யப்பட்டு, தற்போது மூன்றாவது முறையாக 8.45 மணிக்கு மீண்டும் தளம் முடங்கியது. இப்போதுவரை முடக்கம் நீடித்துவருகிறது.
இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் எக்ஸ் தளம் முடங்கியுள்ளதாக பயனர்கள் புகாரளித்து வருகின்றனர். உலகளவில் 40,000-க்கும் மேற்பட்ட பயனர்கள் இந்த முடக்கம் குறித்து புகார்களைப் பதிவு செய்துள்ளனர். Downdetector அறிக்கையின்படி, 56 சதவீத பயனர்கள் மொபைல் செயலியில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அதே நேரத்தில் 33 சதவீதம் பேர் வலைத்தளத்தில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். மேலும் 11 சதவீதம் பேர் சர்வர் இணைப்புகளில் சிக்கல் இருப்பதாகப் புகாரளித்துள்ளனர்.
இந்த திடீர் தடங்கல் குறித்து எக்ஸ் தளமோ அல்லது எலான் மஸ்க் தரப்போ இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இது எப்போது சரிசெய்யப்படும் என்பது குறித்த தகவல்களும் இல்லாததால் எக்ஸ் பயனர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட மற்ற சமூக வலைதளங்களில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT