Last Updated : 28 Feb, 2025 01:53 PM

 

Published : 28 Feb 2025 01:53 PM
Last Updated : 28 Feb 2025 01:53 PM

தேடலின் அடிப்படை ‘அறிவியல்’ ஆக இருக்கட்டும்! | தேசிய அறிவியல் நாள்

நம்மைச் சுற்றி உள்ள அனைத்தும் அறிவியல் மயம்தான். ஆயிரமோ லட்சமோ எண்ணற்ற கேள்விகளுக்கு அறிவியல்பூர்வமாகப் பதில்களைத் தேடிச் சென்றதால்தான் வரலாற்றில் மனிதனால் ஆதிகாலத்தில் இருந்து பரிணமித்து வரமுடிந்தது. அறிவியல் என்பதை ஒரு பாடமாக மட்டும் சுருக்கிவிட முடியாது. பள்ளி, கல்லூரிப் படிப்புகளைத் தாண்டி வாழ்வில் பல சூழல்களில் அறிவியலோடு பயணப்பட வேண்டி இருக்கும் என்பதால், அறிவியல் சிந்தனையை ஒருவர் கண்டிப்பாக வளர்த்துக்கொள்ள வேண்டும்.

நன்மையா, தீமையா? - அறிவியலும் தொழில்நுட்பமும் ஒன்றோடு மற்றொன்று தொடர்புடையவை. அறிவியல்ரீதியான ஆராய்ச்சிகளும் கண்டறிதல்களும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இப்படி அறிவியல் தொழில்நுட்பம் மேம்படும் போது மனிதர்களின் வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் ஏற்படும். சக்கரம், மின்சாரம், தொலைக்காட்சிப் பெட்டி, கணினி, திறன்பேசி எனப் பல கண்டறிதல்கள் அறிவியல் - தொழில் நுட்பத்தின் இணைப்பால் நிகழ்ந்தவை.

இந்தக் கண்டறிதல்கள் ஒருவரின் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும், வசதியைக் கூட்டும், பூமிக்கும் விண்வெளிக்குமான தொடர்பை ஏற்படுத்தும், கல்வி, மருத்துவம், தொடர்பியல் துறைகளில் மனித வாழ்க் கைக்குத் தேவையான வசதியை உண்டாக்க விளையும். வர்க்க பேதம், பாலினச் சமத்துவமின்மை போன்று சமூகப் பிரச்சினைகளைக் களையவும், மாற்றங்கள் உண்டாகவும் தொழில்நுட்ப வளர்ச்சியின் பங்கு முக்கியம்.என்றாலும், அறிவியல் தொழில்நுட்பம் அளவுக்கு மீறினால் நஞ்சாகவும் வாய்ப்பு உண்டு.

ஆக்கபூர்வமான விஷயங்களுக்காகத் தொழில்நுட்பம் பயன்படுவதுபோல அழிக்கவும் பயன்படுத்தப்படுகிறது என்பது கவலைக்குரியது மட்டுமன்றி, விவாதிக்கப்பட வேண்டியதும்கூட. இயற்கைக்குச் சவால்விடும் தொழில் நுட்பமும், போர் போன்று அழிவுக்கான தளங்களில் அறிவியல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதும் ஆபத்தானது.

அதேபோல, எந்தவொரு தொழில்நுட்பத்தையும் அளவுக்கு மீறிப் பயன்படுத்தினால், மனிதனின் இயல்பான கற்பனைத் திறனுக்கும், ஆக்கத்திறனுக்கும் பாதிப்பு ஏற்படும். இதனால் திறன்பேசி, கணினி போன்றவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது உடல் நலத்துக்கும் மன நலத்துக்கும் நல்லது.

அறிவியல் சிந்தனை: உங்களின் எந்த ஒரு கேள்விக்கும் அறிவியல்ரீதியான பதிலை நீங்கள் தேட முற்படும்போது முதலில் ‘யோசனை’ உதிக்கும். அந்த ‘யோசனை’யை எழுதி வைத்துக்கொண்டு, அதைச் செயல்படுத்திப் பார்க்கலாம். அது ஒரு கண்டறிதலாகவும் உருப்பெறலாம். மனித குலத்துக்குத் தேவையான ஆக்கபூர்வமான கண்டறிதல்களுக்கு அறிவியலே அடிப்படை. இதனால் மாணவப் பருவத்தில் வளர்த்துக்கொள்ளும் அறிவியல் சிந்தனைக்குத் தடை போடாமல் வாழ்நாள் முழுவதும் கற்றால் நம் அறிவும் வாழ்க்கையும் மேம்படும்!

இன்று - பிப்.28 - தேசிய அறிவியல் நாள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x