Published : 28 Feb 2025 10:49 AM
Last Updated : 28 Feb 2025 10:49 AM
அறிவியல் தொழில்நுட்பம் முன்னேறிச் சென்று கொண்டிருக்கும் அதேநேரத்தில் உண்மைக்கு முரணான போலியான அறிவியலும் வளர்ந்துவருகிறது. குறிப்பாகச் சமூக வலைதளங்களில் எந்தவித அறிவியல் ஆதாரமும் இல்லாமல் போலியான தகவல்களைப் பொதுத் தளத்தில் பகிரும் போக்கு அதிகரித் துள்ளது. ஒரு நோய் பரவுகிறது என்றால், அந்த நோய் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு எதனால் அந்த நோய் ஏற்படுகிறது, அந்த நோயைத் தடுக்கும் வழிகள் என்னென்ன என்பதைக் கண்டறிந்து, உண்மைத் தரவுகளின் அடிப்படையில் நோயை அணுகுவது அறிவியல்.
ஆனால், போலி அறிவியல் மூட நம்பிக்கைகளால் கட்டமைக்கப்படுகிறது. உறுதிப்படுத்தப்படாத தகவல்களைக் கொண்டு, மக்களைத் தவறாக வழிநடத்துவதே போலி அறிவியல். அதாவது, பகுத்தறிந்து ஒரு செய்தியைத் தெரிவிக்காமல், குழப்பத்தையும் தவறான புரிதலையும் ஏற்படுத்த முயல்வதே போலி அறிவியல். மருத்துவத் துறையில் மட்டுமல்லாமல், பல்வேறு துறைகளில் உண்மைத் தரவுகளை மழுங்கடிக்கும் வேலையைச் செய்கிறது போலி அறிவியல்.
அறிவியல் தன்னைக் கேள்வி களுக்கு உள்படுத்திக்கொண்டு, அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகரும். அறிவியல் ஆராய்ச்சிகள் மீது ஏதேனும் விமர்சனங்கள் இருந்தால் அதை ஏற்றுக்கொண்டு, தன்னை மேம்படுத்திக் கொள்ள முயற்சிக்கும். ஆனால், போலி அறிவியல் தன்னை எந்தக் கேள்விகளுக்கும் உள்படுத்திக்கொள்ளாமல், விமர்சனங்களையும் ஏற்காமல், மக்களைத் தொடர்ந்து குழப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. இதன் காரணமாகப் பெரும்பாலான மக்கள் போலி அறிவியலில் சிக்கிக்கொள்கிறார்கள்.
அந்த வகையில் அறிவியல் மனித சமூகத்தின் எதிர்காலத்தை நோக்கிப் பயணப்படுகிறது; ஆனால், போலி அறிவியல் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னோக்கி இழுத்துச் செல்கிறது. எனவே, கண்ணால் பார்ப்பதையும், காதால் கேட்பதையும் நம்பாமல் பகுந்தறிந்து பார்க்கும் மனநிலையை வளர்க்க இந்த அறிவியல் நாளில் உறுதி ஏற்போம்! - சிட்டி
பிப்.28 - இன்று - தேசிய அறிவியல் நாள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT