Published : 15 Feb 2025 12:11 PM
Last Updated : 15 Feb 2025 12:11 PM
கோவை: தொழில் நகரான கோவையில் அதிகரித்துவரும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) நிறுவனங்களால் வரும்காலத்தில் ஏ.ஐ. மையமாக திகழும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கல்வி, மருத்துவம், வேளாண் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு அதிகரித்து வருகிறது. அமெரிக்கா 500 பில்லியன் டாலர் மதிப்பில் செயற்கை நுண்ணறிவு கட்டமைப்பை ஏற்படுத்தி வருகிறது. சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன.
இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் ரூ.500 கோடியில் செயற்கை நுண்ணறிவு மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில் நகரான கோவையில் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகரித்துவரும் நிலையில் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களும் அதிகரித்து வருகின்றன. மேலும் டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை ஆகிய பெருநகரங்களை தவிர்த்து தொழில்துறை, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சி காரணமாக அதிக வேலை வாய்ப்பு வழங்கும் நகராக கோவை மாறிவருகிறது.
அந்தவகையில், கடந்த ஜனவரியில் சென்னையில் நடைபெற்ற தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்காக கோவையில் அரசு மற்றும் தனியார் பங்களிப்பு முறையில் 20 லட்சம் சதுர அடியில் தகவல் தொழில்நுட்ப வெளி அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. கோவையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் 1.5 லட்சத்துக்கும் மேல் உள்ள நிலையில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடும், விரிவாக்கமும் அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து, இந்திய தொழில் வர்த்தக சபையின் கோவை பிரிவு செயலாளரும், திங் டேட்டா ஏ.ஐ. நிறுவனத்தின் நிறுவனருமான பிரதீப் நடராஜன் கூறும்போது, “செயற்கை நுண்ணறிவு என்பது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு முக்கிய திருப்புமுனை தரும் அம்சமாக உருவெடுத்துள்ளது. செலவினங்கள் மற்றும் வளங்களை மேம்படுத்துதலில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரும்பாலும் நெருக்கடியான நிதி மேலாண்மையுடன் இயங்குகின்றன.
அந்தவகையில், ஊதியப் பட்டியல் மேலாண்மை, தரவு தொகுப்புகள் மற்றும் சரக்கு கண்காணிப்பு போன்ற வழக்கமான பணிகளுக்கான செலவுகளை செயற்கை நுண்ணறிவு குறைக்கும். மேலும், மனித வளத்தை குறைப்பதுடன் இலக்கு வைக்கப்பட்ட வணிக பிரச்சாரங்களை ஏஐ மூலம் முன்னெடுத்து விற்பனையை அதிகரிக்கலாம்.
ஆட்டோமேஷன் விநியோகச் சங்கிலி மேலாண்மை மற்றும் வாடிக்கையாளர் ஆதரவு போன்றவை மூலம் உற்பத்தித்திறன் மேம்படும். டிஜிட்டல் விளம்பர பிரச்சாரங்கள், சமூக ஊடக உத்தி மற்றும் சைபர் பாதுகாப்புக்கு வழிவகுக்கும். செயற்கை நுண்ணறிவை ஏற்றுக்கொள்வது என்பது இனி ஒரு தேர்வு அல்ல. அபரிமித வளர்ச்சி பெற அவசியமான ஒன்றாகும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT