Published : 01 Aug 2014 10:10 PM
Last Updated : 01 Aug 2014 10:10 PM

உலக அளவில் அரை மணி நேரம் முடங்கியது ஃபேஸ்புக்

பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் இன்று (வெள்ளிக்கிழமை) உலகம் தழுவிய அளவில் சுமார் அரை மணி நேரத்துக்கு முடங்கியது.



இந்திய நேரப்படி இரவு 9.30 மணி முதல் 10 மணி வரை ஏற்பட்ட ஃபேஸ்புக் சேவை பாதிப்பின் எதிரொலியாக, மற்றொரு சமூக வலைத்தளமான ட்விட்டரை நோக்கி இணையவாசிகள் படையெடுத்தனர்.

ஃபேஸ்புக் தளத்தில் சர்வரில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. எனினும், 'மன்னிக்கவும், சில கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. இயன்ற வரையில் மிக விரைவில் நிலைமையை சீர்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்' என்ற தகவலை மட்டும் ஃபேஸ்புக் வெளியிட்டது.

உலக அளவில் இணையதளம் மட்டுமின்றி, ஆப்-களிலும், மொபைலிலும் இந்த முடக்க பாதிப்பு ஏற்பட்டது.

ஃபேஸ்புக் தளம் முடங்கிய அடுத்த நொடிகளில், அதுகுறித்த தகவலை ட்விட்டரில் இணையவாசிகள் பகிர்ந்தவண்ணம் இருந்தனர். ஃபேஸ்புக் சேவை பாதிப்பை கிண்டல் செய்தும் பதிவுகள் பல வலம் வந்தன. 'இப்போதுதான் என் தந்தையுடன் பேசுவதற்கு நேரம் கிடைத்தது' என்கிற ரீதியிலான ட்விட்டர் பதிவுகளைக் காண முடிந்தது.

Facebook Error என்ற சொற்றொடர் உலக அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங் ஆனது. அத்துடன், #NowFacebookIsDown மற்றும் #facebookdown ஆகிய இரண்டு ஹேஷ்டேக்-குகளும் உலக அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதல் இரண்டு இடங்களை வகித்தன.

அதன்பின், சுமார் அரை மணி நேரத்தில் ஃபேஸ்புக் வழக்கம்போல் இயக்கத் தொடங்கியது. அதுகுறித்த மகிழ்ச்சியையும், அனுபவத்தையும் பயனாளிகள் பலர் ஸ்டேட்டஸாகவே இடத் தொடங்கினர்.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 160 பில்லியன் டாலர் என்பது கவனத்துக்குரியது.

முன்னதாக, கடந்த ஜூன் 19-ம் தேதியும் இதேபோல் ஃபேஸ்புக் அரை மணி நேரம் முடங்கியது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x