Published : 19 Jul 2024 01:24 PM
Last Updated : 19 Jul 2024 01:24 PM
புதுடெல்லி: மைக்ரோசாப்ட் இயங்குதளம், செயலிகள் மற்றும் சேவைகள் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளன.
பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸில் ஏற்பட்ட திடீர் கோளாறால் பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஐடி நிறுவன ஊழியர்களின் கம்ப்யூட்டர்கள் முடங்கியதால், தவித்து வருகின்றனர். சாப்ட்வேர் அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல் தான் கோளாறு ஏற்படுவதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
இதனால் விண்டோஸ் பயனர்களின் சிஸ்டம்களில் 'ப்ளூ ஸ்க்ரீன் எரர்' Blue Screen of Death (BSOD) காண்பிக்கிறது.
இதுதொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளதில் Crowdstrike அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் மைக்ரோசாப்ட் சாப்ட்வேரில் குளறுபடி ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த திடீர் சிக்கலால் பல நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்திய விமான நிறுவனங்கள் இந்த சிக்கலால் சேவை குறைபாடுகளை எதிர்கொண்டுள்ளதாக தங்கள் வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றன.
விமான நிலைய சேவை பாதிப்பு: சமீபத்தில் தொடங்கப்பட்ட ஆகாசா ஏர்லைன்ஸ் போன்ற நிறுவனங்கள் இதனால் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.
அதேபோல், வின்டோஸ் சேவை பாதிப்பால் விமான நிலையங்களிலும் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை, டெல்லி, மும்பை போன்ற விமான நிலையங்களில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வின்டோஸ் சாப்டவேர் குளறுபடியால் பயணிகளுக்கு போர்டிங் பாஸ் எடுத்துக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கைகளால் போர்டிங் பாஸ் எழுதி கொடுத்து வருவதால் விமானங்கள் புறப்பட தாமதமாகி வருகிறது.
லண்டனில் சேனல் முடக்கம்: லண்டனை சேர்ந்த ஸ்கை நியூஸ் விண்டோஸ் சேவை பாதிப்பால் ஒளிபரப்பை நிறுத்தியுள்ளது. ஸ்கை நியூஸ் ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளர் ஜாக்கி பெல்ட்ராவ் இதனை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து "ஒளிபரப்பை தொடர முயற்சித்து வருகிறோம்" என்றுள்ளார்.
வங்கிகள், விமான நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், டிவி, ரேடியோ மற்றும் பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட வணிகங்கள் என உலகம் முழுவதும் விண்டோஸ் சாப்ட்வேர் குளறுபடியால் பாதிப்பை சந்தித்துள்ளன.
ஆஸ்திரேலியாவில் விண்டோஸ் சேவைகள் முடங்கிய நிலையில், அந்நாட்டு அரசு அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT