Published : 21 May 2024 09:58 PM
Last Updated : 21 May 2024 09:58 PM
சென்னை: விண்வெளியின் கருந்துளையில் இருந்து அதிக ஆற்றலுடன் கூடிய எக்ஸ் கதிர்கள் சீரற்ற நிலையில் வெளியேறுவதை இஸ்ரோவின் அஸ்ட்ரோசாட் விண்கலம் கண்டறிந்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் வானியல் ஆய்வுக்காக தயாரித்த அஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 2015 செப்டம்பர் 28-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. விண்வெளியில் உள்ள புற ஊதாக் கதிர்கள், அங்கு பரவும் எக்ஸ்ரே கதிர்கள் இயக்கம், நட்சத்திரங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்கு அஸ்ட்ரோசாட் அனுப்பப்பட்டது. இது சுமார் 8 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அரிய படங்களை நமக்கு வழங்கி வருகிறது.
இந்நிலையில், அஸ்ட்ரோசாட் விண்கலம் மூலம் கிடைக்கப் பெற்ற தரவுகளை பெங்களூர் யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையம், கவுகாத்தி ஐஐடி, மும்பை பல்கலைக்கழகம் மற்றும் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் ஒருங்கிணைந்து ஆய்வு மேற்கொண்டு வந்தன. அதில் கருந்துளையின் ஸ்விப்ட் ஜே 1727.8-1613 என்ற பகுதியில் இருந்து அதிக ஆற்றல் கொண்ட எக்ஸ் கதிர்கள் சீரற்ற நிலையில் வெளியாவது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையே கருந்துளை என்பது அனைத்தையும் உள்வாங்கிக் கொள்ளும் தீவிர ஈர்ப்பு விசையை கொண்டதாகும்.
அதனுள் ஏதேனும் பெருவெடிப்பு நிகழும்போது போட்டான் கூறுகள் வெளியேறி எக்ஸ் கதிர்கள் உருவாகும். அதன்படி கடந்த ஆண்டு செப்டம்பர் 8 முதல் 13-ம் தேதி வரையான காலத்தில் 1.4 ஹெட்ஸ் முதல் 2.4 ஹெட்ஸ் வரை சீரற்ற எக்ஸ் கதிர் போட்டான் வெளியேற்றம் நடந்துள்ளது. கூடுதல் விவரங்களை https://www.isro.gov.in/ எனும் வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று இஸ்ரோ வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT