Published : 12 Apr 2024 04:40 PM
Last Updated : 12 Apr 2024 04:40 PM

ஐபோனின் லாக்டவுன் மோடு: ஸ்பைவேர் தாக்குதலை தகர்க்கும் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?

சென்னை: ஆப்பிள் நிறுவனம், அதன் ஐபோன் பயனர்களுக்கு மெர்சனரி ஸ்பைவேர் தாக்குதல் குறித்த எச்சரிக்கை அலர்ட்டை அண்மையில் வழங்கியது. இந்நிலையில், இந்த வகை ஸ்பைவேர் தாக்குதலில் இருந்து பயனர்களை காக்கிறது ஐபோனில் உள்ள லாக்டவுன் மோடு. அது குறித்து பார்ப்போம்.

லாக்டவுன் மோடு? - கடந்த 2022-ல் ஐஓஎஸ் 16 இயங்குதளத்தின் ஊடாக லாக்டவுன் மோடினை அறிமுகம் செய்தது ஆப்பிள் நிறுவனம். இது பயனர்களுக்கு அதிதீவிர பாதுகாப்பினை உறுதி செய்கிறது. ஸ்பைவேர் மற்றும் சைபர் அச்சுறுத்தலில் இருந்து பயனர்களை காக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த அம்சத்தை அனைத்து பயனர்களும் பயன்படுத்தலாம். இருந்தாலும், சைபர் தாக்குதல் அச்சுறுத்தலில் அதிகம் டார்கெட் செய்யப்படும் அரசு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் போன்ற ஐபோன் பயனர்கள் இந்த அம்சத்தை பயன்படுத்தலாம் என ஆப்பிள் நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.

லாக்டவுன் மோடினை பயனர்கள் ஆக்டிவேட் செய்தால் போனின் இயக்கம் வழக்கமானதாக இருக்காது. தொலைபேசி அழைப்பு மற்றும் மெசேஜ் செயலிகள் இயல்பாக இயங்கினாலும் சில செயலிகளின் இயக்கம் சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இருக்கும். யாரேனும் அட்டச்மெண்ட் உடன் மெசேஜ் செய்தால் அது பிளாக் (முடக்கம்) செய்யப்படும். இது ஆடியோ, வீடியோ மற்றும் போட்டோ போன்ற கோப்புகளும் உள்ளடங்கும்.

சஃபாரி, ஃபேஸ்டைம் போன்றவற்றை பயன்படுத்துவதில் சில கட்டுப்பாடுகள் இருக்கும். மேலும், பாதுகாப்பற்ற Wi-Fi நெட்வொர்க்கினை பயனர்கள் பயன்படுத்த முடியாது.

இதை ஆக்டிவேட் செய்வது எப்படி? - செட்டிங்ஸ் > பிரைவசி & செக்யூரிட்டி > லாக்டவுன் மோடு > டர்ன் ஆன் லாக்டவுன் மோட் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் போனை ரீ-ஸ்டார்ட் செய்ய வேண்டும்.

மெர்சனரி ஸ்பைவேர் - மெர்சனரி ஸ்பைவேர் தாக்குதலினால் இந்தியா உட்பட 92 நாடுகளைச் சேர்ந்த அத்தனை ஐபோன் பயனர்களின் தகவல்களும் திருடப்படக் கூடும் என்று ஆப்பிள் நிறுவனம் தற்போது எச்சரித்துள்ளது.

“நீங்கள் யார், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை குறிவைத்து கண்டறிய இந்த தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பிருக்கிறது. இத்தகைய தாக்குதல் குறித்த துல்லியமான தகவல்களை ஒருபோதும் சேகரிக்க முடியாமல் போனாலும் ஆப்பிள் நிறுவனத்தின் இந்த எச்சரிக்கையைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள்” என ஆப்பிள் தனது நோட்டிபிகேஷனில் பயனர்களிடம் கூறியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x