Published : 02 Mar 2024 06:23 PM
Last Updated : 02 Mar 2024 06:23 PM
புதுடெல்லி: பில்லிங் கொள்கை தொடர்பாக கூகுள் மற்றும் இந்திய நிறுவனங்களுக்கு இடையே மோதல் எழுந்த நிலையில், அதனை தீர்க்க கூகுள் அதிகாரிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.
பிரச்சினை என்ன? - கூகுள் ப்ளே ஸ்டோர் ஆப்பிலிருந்து பயனர்கள் தனியார் செயலிகளை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இதற்காக சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் கூகுளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். தனியார் நிறுவனங்களிடம் இருந்து கட்டண சேவையாக இதுவரை கூகுள் 11 சதவீதம் முதல் 26 சதவீதம் வரை வசூலித்து வந்தது.
இந்நிலையில், இந்தக் கட்டணத்தை உயர்த்தி அறிவித்தது கூகுள். அதன்படி, 15 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் வரை அறிவித்தது. ஆனால், இந்தக் கட்டணத்தை சில இந்திய நிறுவனங்கள் செலுத்தவில்லை. இதையடுத்து பிரபலமான 10 இந்திய நிறுவனங்களின் செயலிகளை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது.
கூகுள் தனது அறிவிப்பில், "கட்டணம் வசூலிக்க கூகுள் நிறுவனத்துக்கு எந்த தடையும் எந்த நீதிமன்றங்களும் விதிக்கவில்லை. எங்களுக்கு உரிமையுள்ள தொகையை கேட்டும் இதுவரை தராத நிறுவனங்களின் செயலிகளே நீக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களுக்கு சுமார் 3 வருடங்களுக்கும் மேல் நேரம் கொடுத்தும் கட்டணத்தை செலுத்த தவறிவிட்டன. எனவேதான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கிய செயலிகளில் இந்தியாவின் பிரபலமான வேலை தேடுவோருக்கான செயலியான "நவுக்ரி.காம்" (naukri.com), ரியல் எஸ்டேட் சேவைக்கான செயலியான "நைன்டிநைன் ஏக்கர்ஸ்.காம்" (99acres.com), திருமண சேவைக்கான "பாரத்மேட்ரிமோனி.காம்" (bharatmatrimony.com) மற்றும் "ஷாதி.காம்" (shaadi.com) உள்ளிட்டவை முக்கியமானவை.
கூகுள் நடவடிக்கை குறித்து பேசியுள்ள பாரத் மேட்ரிமோனி நிறுவனர் முருகவேல் ஜானகிராமன், "இது இந்தியாவின் இணைய சேவைக்கு ஓர் இருண்ட நாள்" என்றுள்ளார். இதேபோல், "இந்திய நிறுவனங்களின் செயலிகளுக்கு என பிரத்யேகமான ஒரு ஆப் ஸ்டோர் தேவை" என நவுக்ரி.காம் நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் பிக்சந்தானி வலியுறுத்தியுள்ளார்.
இப்படியாக இந்திய நிறுவனங்கள் - கூகுள் மோதல் போக்கை அடுத்து சிக்கலை தீர்க்க கூகுள் அதிகாரிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.
இதுதொடர்பாக பேசியுள்ள மத்திய அமைச்சர், "கூகுள் தனது அணுகுமுறையில் நியாயமானதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்தியாவில் வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பு உள்ளது. எனவே, ஸ்டார்ட்அப் களின் நலன்களைப் பாதுகாப்பது முக்கியம். பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT