Published : 21 Feb 2024 11:18 PM
Last Updated : 21 Feb 2024 11:18 PM
பெங்களூரு: போன் பே நிறுவனம் Indus Appstore எனும் ஆப்ஸ்டோரினை பயனர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது. இதில் சுமார் 2 லட்சம் செயலிகள் இடம் பெற்றுள்ளது. 12 இந்திய மொழிகளில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுளின் பிளே ஸ்டோருக்கு போட்டியாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் யுபிஐ மூலம் பணம் அனுப்ப மற்றும் பெற மட்டுமல்லாது கூடுதலாக பல்வேறு சேவைகளை இணையவழியில் வழங்கி வருகின்றன ஃபின்டெக் நிறுவனங்கள். அந்த வகையில் போன்பே நிறுவனம் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. சினிமா டிக்கெட், ரயில், பேருந்து, விமான டிக்கெட், விடுதி முன்பதிவு, காப்பீடு, ரீசார்ஜ் மற்றும் பில் பேமென்ட் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பயனர்கள் இதில் பெற்று வருகின்றனர்.
இந்த சூழலில் Indus Appstore அறிமுகமாகி உள்ளது. கடந்த ஆண்டு இது குறித்த பேச்சு வெளிவந்தது. போன் பே செயலியை பயனர்கள் அப்டேட் செய்தால் இந்த ஆப் ஸ்டோரை பயனர்கள் தங்கள் போனில் இன்ஸ்டால் செய்வதற்கான லிங்கை பெறலாம். அதை பயன்படுத்தி ஆப் ஸ்டோரை டவுன்லோட் செய்து, இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.
Indus Appstore-னை இன்ஸ்டால் செய்ததும் பயனர்கள் தங்களது விருப்ப மொழியை தேர்வு செய்ய வேண்டும். தமிழ், ஆங்கிலம் உட்பட 12 மொழிகளில் இந்த செயலியை பயனர்கள் பயன்படுத்தலாம். தொடர்ந்து மொபைல் எண்ணை உள்ளிட்டு, ஓடிபி சரிபார்ப்பு மேற்கொண்ட பின்னர் செயலியை பயன்படுத்தலாம். சமூக வலைதள செயலிகள் தொடங்கி மேட்ரிமோனி, நிதி, வணிகம், ஹெல்த், கல்வி, பொழுதுபோக்கு, செய்தி, கேம்ஸ், பயணம் என சுமார் 45 வகையிலான செயலிகளை பயனர்கள் இதில் பெற முடியும். கிட்டத்தட்ட கூகுள் பிளே ஸ்டோர் போலவே இதன் இயக்கம் உள்ளது. பயனர் அனுபவம் எளிதான வகையில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் லோன் ஆப் மோசடி விவகாரத்தில் இதன் பாதுகாப்பு தன்மை குறித்த விவரம் அடுத்தடுத்த நாட்களில் தெரியவரும். இதில் தங்கள் செயலிகளை லிஸ்ட் செய்ய டெவலப்பர்களுக்கு ஓராண்டு காலத்துக்கு கட்டணம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் ஆப் மார்க்கெட் தளத்தில் தங்களது இந்த முயற்சி ஆரோக்கியமான போட்டிக்கு வழிவகுக்கும் என போன் பே நிறுவன சிஇஓ சமீர் நிகம் தெரிவித்துள்ளார். ஸ்மார்ட்போன் நிறுவனங்களுடன் இணைந்து இதனை மொபைல் இன்-பில்ட் செயலியாக கொண்டு வரும் திட்டத்தையும் போன் பே முன்னெடுத்துள்ளதாக தகவல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT