Published : 16 Feb 2024 10:56 PM
Last Updated : 16 Feb 2024 10:56 PM

‘Sora AI’ - டெக்ஸ்ட்களை ஒரு நிமிட வீடியோவாக உருவாக்கும் ஏஐ மாடல்!

Sora AI மாடல் ஜெனரேட் செய்த வீடியோவின் ஸ்க்ரீன்ஷாட்

சான்பிரான்சிஸ்கோ: உலக அளவில் பெரும்பாலான மக்கள் மத்தியில் பேசு பொருளாக இருப்பது ஏஐ தொழில்நுட்பம் தான். இந்த சூழலில் பயனர்கள் உள்ளிடும் டெக்ஸ்ட்களை ஒரு நிமிட வீடியோவாக உருவாக்கும் ‘Sora’ எனும் ஏஐ மாடலை ஓபன் ஏஐ நிறுவனம் உருவாக்கியுள்ளது. அது குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

கடந்த 2022-ல் ஓபன் ஏஐ நிறுவனம் சாட்ஜிபிடி-யை அறிமுகம் செய்தது. இந்த ஏஐ சாட்பாட் மூலம் பயனர்கள் பல்வேறு விஷயங்களை உரையாடல் மூலம் அறிந்து கொள்ளலாம். சாட்ஜிபிடி-யின் வரவு உலக அளவில் ஜெனரேட்டிவ் ஏஐ குறித்த பேச்சினை பரவலாக்கியது. இதே நிறுவனத்தின் DALL-E மூலம் பயனர்கள் தங்கள் மனதில் கற்பனையாக இருக்கும் படங்களுக்கு உயிர் கொடுக்க முடியும்.

இந்த சூழலில் அதே பாணியில் பயனர்கள் உள்ளிடும் டெக்ஸ்ட் ப்ராம்ட்களை உள்வாங்கிக் கொண்டு அதற்கு ஏற்ப ஒரு நிமிட வீடியோவாக உருவாக்கும் திறனை Sora ஏஐ மாடல் கொண்டுள்ளதாக ஓபன் ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்பெல்லாம், சினிமா படங்களில் நடிகர்கள் பாடல் பாடினால் ‘இந்தப் பாடலை பாடியது உங்கள் மனம் கவர்ந்த நடிகர்’ என அவரது பெயரை சேர்த்து, பாடலுக்கு கீழே குறிப்பிடுவார்கள். அதுபோல ‘இந்த வீடியோவை உருவாக்கியது Sora ஏஐ’ என குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பயனர்கள் பகிரும் நாள் வெகு தொலைவில் இல்லை. இது குறித்த அறிவிப்பை ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.

இப்போதைக்கு இது பரிசோதனை நிலையில் உள்ளது. டெவலப்பர்கள், ஆர்டிஸ்ட், டிசைனர்ஸ், திரைப்பட படைப்பாளிகள் போன்றவர்களுக்கு மட்டுமே வழங்கி வருவதாக தெரிகிறது. அவர்கள் தெரிவிக்கும் கருத்துகளை கொண்டு இதனை மேம்படுத்திய பிறகு பொதுவெளியில் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இதில் உள்ள ரிஸ்க் மற்றும் சிக்கல்களை அடையாளம் காணும் வகையில் இந்த சோதனை முயற்சி என தகவல்.

டீப்ஃபேக் விவகாரம் ஒருபக்கம் விவாத பொருளாக உள்ள நிலையில் ரியலிஸ்டிக் மற்றும் இமேஜினேட்டிவ் (கற்பனை) வீடியோ காட்சிகளை Sora ஏஐ மாடல் மூலம் பயனர்கள் உருவாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஏஐ மாடல் ஜெனரேட் செய்துள்ள ஒவ்வொரு வீடியோவும் பார்ப்பதற்கு அசல் வீடியோ போலவே உள்ளது. கேரக்டர், ஆங்கிள், பேக்கிரவுண்ட் என அனைத்தும் விவரத்துடன் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x