Published : 18 Nov 2023 09:10 AM
Last Updated : 18 Nov 2023 09:10 AM
நியூயார்க்: ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான (சிஇஓ) சாம் ஆல்ட்மேன் நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக இடைக்கால சிஇஓ-வாக 34 வயதான மீரா மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். அல்பேனியாவில் பயின்று கனடாவில் கல்வி பயின்ற மீரா மூர்த்தி ஓபன் ஏஐ நிறுவனத்தில் மிக முக்கியப் பொறுப்பு வகித்துவந்தார். சாட் ஜிபிடி, DALL E உள்பட பல்வேறு தொழில்நுட்பங்கள் உருவாக்கத்திலும் அவர் முக்கியப் பங்கு வகித்தார். திரைமறைவில் இருந்த அவரது புகழ் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இது தொடர்பாக சாட் ஜிபிடியின் தாய் நிறுவனமான ஓபன் ஏஐ வெளியிட்ட அறிவிப்பில், நிர்வாக இயக்குநர்களின் கூட்டத்தில் சாம் ஆல்ட்மேனின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அவரிடம் பல விஷயங்களில் வெளிப்படைத் தன்மை இல்லை என்பதை உறுதி செய்தோம். நிர்வாகக் குழு அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டது. அவர் இனியும் ஓபன் ஏஐ நிறுவனத்தை முன்னின்று நடத்தமுடியும் எனத் தோன்றவில்லை. அதனால் அவர் நீக்கப்படுகிறார் எனத் தெரிவித்துள்ளது.
இதனை தனது எக்ஸ் தளத்தில் உறுதி செய்துள்ள ஆல்ட்மேன், "ஓபன் ஏஐ-யில் எனது பணிக்காலத்தை நான் மிகவும் விரும்பினேன். அது தனிப்பட்ட முறையில் என்னை உருமாற்றியது. உலகத்துக்கும் ஒரு சிறிய மாற்றத்தைக் கொடுத்தது என நம்புகிறேன். என்னுடன் பணிபுரிந்த அனைவருமே மிகவும் திறமையானவர்கள். அடுத்த என்னவென்று பற்றி சொல்ல நிறைய இருக்கிறது" என்றார்.
சமீபத்தில் ‘டீப் ஃபேக்’ மூலம் நடிகை ராஷ்மிகாவின் முகத்தை வேறொரு பெண்ணின் உடலோடு பொருத்தி, அதனை சிலர் வீடியோவாக வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பலரும் இந்த வீடியோவுக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.
முன்னதாக நேற்று பிரதமர் மோடி, "செயற்கை நுண்ணறிவு உதவியுடன் டீப் ஃபேக் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் போலிவீடியோக்கள், ஆடியோக்கள், புகைப்படங்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும். ஒருபோதும் தவறாக பயன்படுத்தக்கூடாது.
எனது சிறு வயது முதல் நான்கர்பா நடனமாடியது கிடையாது. ஆனால், நான் கர்பா நடனமாடும் போலி வீடியோவை அண்மையில் பார்த்தேன். அந்த வீடியோ உண்மையான வீடியோ போன்று இருக்கிறது. இதுபோன்று போலி வீடியோக்கள் ஆன்லைனில் பரவி வருவது கவலையளிக்கிறது.
செயற்கை நுண்ணறிவு, டீப் ஃபேக் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதால் மிகப்பெரிய சவால்கள், அச்சுறுத்தல்கள் உருவாகி வருகின்றன. போலி வீடியோக்களை உண்மை என்று நம்பி ஏமாறும் ஆபத்து அதிகமாகஇருக்கிறது.
இதுபோன்ற டீப் ஃபேக் வீடியோக்கள் குறித்து பொதுமக்களிடையே ஊடகங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முன்னோடியான சாட்ஜிபிடி நிறுவனம், டீப் ஃபேக் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வீடியோக்களை அடையாளம் கண்டு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்" என்று பேசியிருந்தார். இந்நிலையில் சாம் ஆல்ட்மேன் நீக்கப்பட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT