Published : 11 Sep 2023 07:40 AM
Last Updated : 11 Sep 2023 07:40 AM

ரயில் இன்ஜின் டிரைவர்களை விழிப்புடன் வைத்திருக்க AI தொழில்நுட்பத்துடன் புதிய கருவி: ரயில்வே அமைச்சகம் திட்டம்

கோப்புப்படம்

புதுடெல்லி: ரயில் இன்ஜின் டிரைவர்களை விழிப்புடன் வைத்திருக்க செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய கருவியைப் பயன்படுத்த மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

ரயில் இன்ஜினை இயக்கும் டிரைவர்கள் இரவு நேரங்களில் கண்ணயர்ந்து விடுவதால் ரயில்கள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. இதைத் தடுக்கவும், ரயில் இன்ஜின் டிரைவர்கள் கண்ணயர்ந்து விடாமல் பார்த்துக்கொள்ளவும் செயற்கை நுண்ணறிவு மூலம் புதிய கருவியை உருவாக்கும் திட்டத்தில் நார்த்ஈஸ்ட் ஃபிரான்டியர் ரயில்வே (என்எஃப்ஆர்) ஈடுபட்டுள்ளது.

இந்த செயற்கை நுண்ணறிவு கருவியை ரயில் இன்ஜினில் பொருத்துவதன் மூலம், டிரைவர்கள் தூங்கினால் அந்தக் கருவி எச்சரிக்கை செய்யும். இதன்மூலம் டிரைவர்களை அழைத்து அவர்களை எச்சரிக்கை செய்து விழிப்புடன் வைக்க முடியும். இந்தக் கருவிக்கு ரயில்வே டிரைவர் உதவி கருவி (ஆர்டிஏஎஸ்) என்று பெயரிடப்பட்டுள்ளது.

இன்ஜின் டிரைவர்கள் கண்ணயர்ந்தால் இந்த கருவி சத்தம்எழுப்பி எச்சரிப்பதோடு, உடனடியாக அவசர கால பிரேக்குகளை செயல்படுத்தி ரயிலை நிறுத்தும் வசதியை பெற்றுள்ளது.

இந்த ஆர்டிஏஎஸ் கருவி யானது, கண்காணிப்பு கட்டுப்பாடு கருவியுடன் இணைப்பைப்பெற்றிருக்கும். இதன்மூலம் அவசர கால பிரேக்குகளை செயல்படுத்தும் தன்மையை இந்த கருவி பெறும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து ரயில்வே அமைச்சகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்த ஆர்டிஏஎஸ் கருவியை தற்போது மேம்படுத்தி வருகிறோம். இதற்கான சோதனை ஓட்டங்களும் நடைபெற்று வருகின்றன

சில வாரங்களில் தயார்: என்எஃப்ஆர்-ன் தொழில்நுட்பக் குழு இந்த கருவியை சோதனை செய்து வருகிறது. இன்னும் சில வாரங்களில் இந்த கருவி தயாராகி விடும். இந்தக் கருவி தயாரானதும் சுமார் 20 சரக்கு ரயில் இன்ஜின்களிலும், பயணிகள் ரயில் இன்ஜினிலும் பொருத்தப்படும்" என்றார்.

அதே நேரத்தில் இந்தக் கருவியானது தேவையற்றது என்று இந்தியன் ரயில்வே லோகோரன்னிங்மேன் அமைப்பின் (ஐஆர்எல்ஆர்ஓ) செயல் தலைவர் சஞ்சய் பந்தி தெரி வித்துள்ளார். இதுபோன்றகருவிகள் ஏற்கெனவே அதிக வேகம் கொண்ட ரயில்களில் பொருத்தப்பட்டுள்ளன என்றும், ரயில் இன்ஜின் டிரைவர்கள் கண்ணயர்ந்தால் அந்தக் கருவிகள் எச்சரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, “அதிவேக ரயில் இன்ஜின்களில் கால்களால் இயக்கக்கூடிய லிவர் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இந்த லிவரை ஒவ்வொரு 60 விநாடிக்கும் இன்ஜின் டிரைவர் அழுத்த வேண்டும். அப்படி அந்த டிரைவர் அதைச் செய்யாவிட்டால், அவசர கால பிரேக்குகள் தானாகவே இயக்கப்பட்டு ரயில் நின்றுவிடும். எனவே இந்த புதிய கருவி தேவையற்றது" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x