Published : 16 Aug 2023 09:31 PM
Last Updated : 16 Aug 2023 09:31 PM
பூவுலகில் மனிதனுக்கு மனிதன் தான் போட்டி என்ற காலமெல்லாம் மாறி மனிதன் எந்திரத்துடன் நூற்றாண்டுக்கும் மேலாக போட்டியிட்டு வரும் சூழல் நிலவுகிறது. எந்திரத்தின் தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சி வரம் என வர்ணிக்கப்படுகிறது. அதே நேரத்தில் அதன் விளைவாக மனிதர்கள் வேலையை இழக்கும் சாபமும் உள்ளது.
தொழில்துறை புரட்சிக்குப் பிறகு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும், அதனால் வேலைப் பாதுகாப்பு சார்ந்து ஏற்படும் ஐயமும் தொடர்கதையாக உள்ளது. சில தசாப்தங்களுக்கு முன்னர் எந்திர மயமாக்கல் வேலை இழப்பு பற்றிய கவலையை மனிதர்களிடையே ஏற்படுத்தியது. படிப்படியாக பல மாற்றங்களை கண்டு அது ஏஐ-க்கு (செயற்கை நுண்ணறிவு) வந்துள்ளது.
எல்லாம் LLM செய்கின்ற செயல்? - ஏஐ புரட்சியின் பின்புலத்தில் இருப்பது லார்ஜ் லேங்குவேஜ் மாடல் (LLM) எனும் தொழில்நுட்பம் தான். தொழில்நுட்ப பயனர்கள் எழுப்புகின்ற கேள்விகள் அனைத்துக்கும் கிட்டத்தட்ட மனிதனை போலவே பதில்களை உருவாக்கும் திறன் கொண்டது இந்த எல்எல்எம். இதுதான் ஓபன் ஏஐ, கூகுள் பார்ட், மைக்ரோசாஃப்ட் பிங் போன்ற ஏஐ பாட்களின் இயக்கத்துக்கு அடிப்படை.
மனிதனின் மூளை செய்யும் வேலையை கிட்டத்தட்ட அதே போல செய்யும் வகையில் கணினி அமைப்பு இதில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சார்ந்த நெட்வொர்க்குகள் இணையத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு டெக்ஸ்ட் சார்ந்து பயிற்றுவிகக்கப்பட்டுள்ளது (ட்ரெயின்).
இதன் மூலம் பயனர்கள் உரையாடல் வழியே கேட்கும் கேள்விக்கு பதில் தருகிறது. அதுவும் அந்த கேள்விக்கு பொருத்தமான பதிலை வழங்கும் வகையில் ஏஐ பாட்கள் வழங்கும் பதில்கள் விரிவாக உள்ளது.
இதன் விளைவு என்ன?- கூகுளின் உதவியின்றி பயனர்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை விரல்நுனியில் வைத்துக் கொள்ள ஏஐ பாட்கள் உதவி செய்கின்றன. சென்னையில் இருந்து புதுச்சேரிக்கான வழியை அறியாத ஓட்டுநருக்கு எப்படி ஜிபிஎஸ் நேவிகேஷன் உதவுகிறதோ அது போல ஏஐ உதவுகிறது.
அதே நேரத்தில் மனிதர்கள் மேற்கொள்ளும் சில வேலைகளுக்கு ஏஐ மாற்றாக அமையும். அதற்கு சிறந்த உதாரணம் கால் சென்டர் பணி. இதன் மூலம் பயனர்கள்/வாடிக்கையாளர்களுக்கான ரெஸ்பான்ஸை ஏஐ அதிவேகமாக தரும். இருந்தாலும் தங்களுக்கான தேவையை ஏஐ பூர்த்தி செய்து வைப்பதில் மக்கள் தரும் வரவேற்பும் இதில் கவனிக்கப்படும். வங்கிகளில் வாடிக்கையாளர்களின் சந்தேகங்களுக்கு பாட்கள் பதில் டெக்ஸ்ட் மூலம் பதில் தருவதுபோல் இது இயங்கலாம். தானியங்கு குரல் பதிவாகவும் செயல்பட வாய்ப்பு உள்ளது.
மறுபக்கம் உடல் உழைப்பு சார்ந்த மேனுவல் பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு மாற்றாக ஏஐ எந்திரங்களை கட்டமைப்பது கடினம். இருந்தாலும் பணியாட்களுக்கு மாற்றாக அமைவது என்பதை காட்டிலும் பணியின் செயல்திறன் சார்ந்த மாற்றங்களை ஏஐ ஏற்படுத்தும். அந்த வகையில் மனிதர்களுக்கு ஏஐ அசிஸ்டன்ட்டாக இயங்கும். இது பயன்பாட்டிலும் உள்ளது.
புரோகிராம் கோட்களை எழுதும் பணியில் திறம்பட ஏஐ பாட்கள் பதில் கொடுக்கும். பயனர்களுக்கு தேவையான பதிலை மட்டும் இதில் பெற்றுக் கொள்ளலாம்.
நுண்ணறிவு திறன் கொண்ட அசிஸ்டன்ட் மட்டுமே: தொழில்நுட்ப வளர்ச்சியால் அதீத நுண்ணறிவு திறன் கொண்ட ஏஐ பயன்பாடு அனைத்து இடங்களிலும் பொதுவானதாக இருக்கும். அதனால் நிறுவனங்கள் தொழில்நுட்பத்தை சார்ந்து வேலையாட்களை பணி அமர்த்துவது குறித்து நிர்வகிக்கும்.
அதே நேரத்தில் எல்எல்எம் வழங்கும் தகவல்கள் இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. சமயங்களில் இந்த தகவல்கள் ஒரு சார்பு சார்ந்தும், தவறானதாகவும் இருக்க வாய்ப்புள்ளது. பயனர்களை தவறாக வழிநடத்தும் நோக்கில் ஹேக்கர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டலாம். இப்படி சைபர் செக்யூரிட்டி சார்ந்த சங்கடங்களும் இதில் இருப்பதால் அந்த தகவல்கள் சரியானது தானா என்பதை உறுதிப்படுத்த தொழிலாளர்களின் தலையீடு அவசியமாகிறது. ஜிபிஎஸ் தொழில்நுட்பம் அறிமுகமான தொடக்க நாட்களில் வாகனங்கள் பயணிக்க முடியாத வழியை காட்டும். ஏஐ வழங்கும் பதிலையும் அப்படி தான் பார்க்க வேண்டியுள்ளது. அது தரும் பதில்களை அப்படியே நம்ப முடியாது.
நம்பகத்தன்மையை ஆராய்ச்சியாளர்களால் அல்காரிதங்களை கொண்டு கட்டமைக்க முடியாது. அந்த வகையில் மனிதர்களின் கையே மேலோங்கும்.
| தொடர்வோம் |
முந்தைய அத்தியாயம்: AI சூழ் உலகு 2: உத்தம வில்லனின் தரமான செய்கை - ஏஐ கருவிகள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT