Published : 06 Jul 2023 12:53 PM
Last Updated : 06 Jul 2023 12:53 PM
ட்விட்டர் சமூக வலைதளத்திற்கு மாற்று என மெட்டாவின் ‘த்ரெட்ஸ்’ தளம் இந்தியா உட்பட உலகம் முழுவதும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ட்விட்டர் தளத்தில் எண்ணற்ற மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் த்ரெட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. த்ரெட்ஸ் அறிமுகம் செய்யப்பட்ட முதல் 4 மணி நேரத்தில் சுமார் 5 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளதாக மார்க் ஸூகர்பெர்க் தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் தளத்தை அடிப்படையாக வைத்து த்ரெட்ஸ் இயங்குகிறது. பயனர்களை கவரும் வகையில் இன்ஸ்டாகிராம் தளத்தில் ஏற்கனவே வெரிஃபை செய்யப்பட்ட பயனர்களுக்கு இதில் ப்ளூ டிக்கும் வழங்கப்படுகிறது. இதன் அம்சங்கள் அப்படியே ட்விட்டரை நகல் எடுத்தது போல உள்ளன. முன்னதாக, அமெரிக்காவில் 6-ம் தேதியும் (இன்று), உலக அளவில் 7-ம் தேதியும் (நாளை) த்ரெட்ஸ் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், ட்விட்டருக்கு சவால் கொடுக்கும் விதமாக முன்கூட்டியே அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து உலக அளவிலும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதாவது ஈஸ்டர்ன் டைம் நேரப்படி ஜூலை 6, காலை 10 மணிக்கு அறிமுகம் செய்யப்பட இருந்தது. ஆனால், ஈஸ்டர்ன் டைம் நேரப்படி ஜூலை 5, மாலை 7 மணி அளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டவுன்லோட் செய்வது எப்படி? ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன் பயனர்கள் நேரடியாக ஆப் ஸ்டோரில் இருந்து த்ரெட்ஸ் செயலியை டவுன்லோட் செய்யலாம். அதன் பின்னர் பயனர்கள் தங்கள் இன்ஸ்டா கணக்கு விவரங்கள் மூலமாக இதில் லாக்-இன் செய்யலாம். அதில் இருக்கும் விவரங்களை அப்படியே இதில் சேர்க்கலாம். அதற்கு பயனர்கள் பர்மிஷன் கொடுக்க வேண்டியது அவசியம்.
த்ரெட்ஸ்: அம்சங்கள் என்ன? மெட்டா நிறுவனம் பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என மூன்று சமூக வலைதளங்களை தன் வசம் வைத்துள்ளது. இந்த மூன்று தளங்களும் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பயனர்களால் பல்வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் முழுவதும் டெக்ஸ்டை அடிப்படையாகக் கொண்டு த்ரெட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதில் ஒவ்வொரு பதிவையும் 500 கேரக்டர்கள் என்ற எண்ணிக்கையில் பயனர்கள் பதிவிட முடியும். லிங்க், போட்டோ மற்றும் 5 நிமிட வீடியோக்களையும் பதிவிடலாம். ஒரு பதிவுக்கு 10 போட்டோக்கள் பதிவிட முடியும். பயனர்கள் தங்கள் த்ரெட்ஸ் பதிவிற்கு யார் பதிலளிக்கலாம் என்பதையும் கட்டுப்படுத்தலாம். மேலும், ட்விட்டரை போலவே பதிவை மீண்டும் ரீ போஸ்ட் செய்யவும், Quote செய்யவும் முடியும். பதிவை லைக் செய்யவும், இன்ஸ்டாவில் ஷேர் செய்யவும் முடியும்.
பயனர்கள் மற்றவர்கள் பின் தொடரும் வசதியும் இதில் உள்ளது. முக்கியமாக இன்ஸ்டாவில் பிளாக் செய்யப்பட்ட கணக்குகள் இதில் தானாகவே பிளாக் செய்யப்படும் என தெரிகிறது. 500 கேரக்டரை தாண்டும் போது ட்விட்டரை போல வரிசையாக இதிலும் பயனர்கள் பதிவிடலாம். இந்த தளத்தின் வலைதளம் இன்னும் லைவுக்கு வரவில்லை. அதனால் இப்போதைக்கு இதனை செயலி மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும். பயனர்கள் இதில் ஸ்டோரிஸை இப்போதைக்கு பகிர முடியாது. டிஎம் வசதியும் இல்லை. ஆக்டிவிட்டி Pub உடன் இணக்கம் செய்யும் திட்டமும் மெட்டா வசம் உள்ளதாக தெரிகிறது. உரையாடல்களுக்கு த்ரெட்ஸ் சிறந்த இடமாக இருக்கும் என நம்புவதாக மெட்டா தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT