Published : 08 Jun 2023 02:12 PM
Last Updated : 08 Jun 2023 02:12 PM
சென்னை: இந்தியாவில் கட்டண சந்தா நடைமுறையின் கீழ் ‘Meta Verified’ பயன்பாட்டை அறிமுகம் செய்துள்ளது மெட்டா நிறுவனம். இதன் மூலம் பயனர்கள் சந்தா செலுத்தி தங்களது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கை Verified கணக்காக மாற்றலாம். அதன் விலை மற்றும் இதர விவரங்களை பார்ப்போம்.
ட்விட்டர் வழியில் பயனர்களுக்கு சந்தா முறையின் கீழ் Verified கணக்கு என்ற அங்கீகாரத்தை மெட்டா நிறுவனமும் கொண்டு வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தது. அந்த வகையில் தற்போது அது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஸூகர்பெர்க் இதனை தெரிவித்துள்ளார்.
இதனால் ஏற்கனவே வெரிஃபை செய்யப்பட்ட கணக்குகளின் அங்கீகாரத்தில் மாற்றம் ஏதும் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து அதனை கட்டணமின்றி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் மெட்டா Verified குறித்த அறிவிப்பு வெளியாகி இருந்தது.
பயனர்கள் வெப் பிரவுசர்களில் மெட்டா Verified பயன்பாட்டுக்கான மாதாந்திர சந்தா ரூ.599 என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதள பயன்பாட்டுக்கு மாதாந்திர கட்டணம் ரூ.699 என அறிவிக்கப்பட்டுள்ளது.
மெட்டா Verified பயன்பாட்டை பயனர்கள் பெறுவது எப்படி? இதற்கு சில க்ரைடீரியா வைத்துள்ளது மெட்டா. அந்த வகையிலான பயனர்களுக்கு மட்டுமே Verified பயன்பாடு கிடைக்கும் என தெரிகிறது. அதே போல பயனர்களின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பதிவும் இதற்கு அடிப்படை எனத் தெரிகிறது. 18 வயது நிரம்பியவர்கள் மற்றும் அரசு வழங்கிய புகைப்பட அடையாள சான்றிதழும் இதற்கு அவசியம். முக்கியமாக பயனரின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பெயருடன் இந்த அடையாள அட்டையில் உள்ள பெயர் பொருந்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பயனர்கள் பதிவிடும் கன்டென்ட்டுக்கு பரவலான ரீச் கிடைப்பது உட்பட சில பிரத்யேக வசதிகள் மற்றும் அம்சங்கள் கிடைக்கும் என தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT