Published : 01 Jun 2023 06:24 AM
Last Updated : 01 Jun 2023 06:24 AM
தூத்துக்குடி- மும்பை இடையே இயக்கப்படும் கோடை கால சிறப்பு ரயிலுக்கு பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே, இந்த ரயிலை நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் தொழில் நகரமாக தூத்துக்குடி விளங்குகிறது.
துறைமுக நகரமான தூத்துக்குடி வான்வழி, கடல் வழி, சாலை வழி, ரயில் வழி ஆகிய நான்கு வகையான போக்குவரத்து வசதியைக் கொண்டிருந்த போதிலும், வளர்ச்சிக்கு ஏற்ப போதிய ரயில் வசதி இல்லை என்பது நீண்ட கால குறையாக இருந்து வருகிறது. தற்போது தூத்துக்குடியில் இருந்து சென்னை மற்றும் மைசூருக்கு மட்டுமே தலா ஒரு விரைவு ரயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், தூத்துக்குடி- ஓகா இடையே வாராந்திர ரயில் இயக்கப்படுகிறது.
இதுதவிர, தூத்துக்குடி- திருநெல்வேலி இடையே பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட தூத்துக்குடி- கோவை இணைப்பு ரயில் மீண்டும் இயக்கப்படவில்லை. தொழில் நகரமான தூத்துக்குடியை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைப்பதற்கு தேவையான நீண்ட தூர ரயில்கள் இல்லை என தொழில் வர்த்தக சங்கங்கள், பயணிகள் நலச்சங்கம், நுகர்வோர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
மும்பை சிறப்பு ரயில்: கோடை கால கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் தூத்துக்குடி- மும்பை இடையே 2 சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. முதல் சிறப்பு ரயில் மே 26-ம் தேதி மும்பையில் இருந்து புறப்பட்டு 27-ம் தேதி இரவு தூத்துக்குடி வந்து சேர்ந்தது. தொடர்ந்து மே 28-ம் தேதி காலை தூத்துக்குடியில் புறப்பட்ட சிறப்பு ரயில், 29-ம் தேதி மாலை மும்பையைச் சென்றடைந்தது. இரண்டாவது சிறப்பு ரயில் நாளை (ஜூன் 2) மும்பையில் இருந்தும், 4-ம் தேதி தூத்துக்குடியில் இருந்தும் இயக்கப்படுகிறது.
கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, பாபநாசம், கும்பகோனம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருத்தணி, ரேணிகுண்டா, கடப்பா, குண்டக்கல், ரெய்ச்சூர், வாடி, சோலாப்பூர், புனே, லோனவாலா, கல்யாண், தாதர் மார்க்கமாக இயக்கப்படும் இந்த சிறப்பு ரயிலுக்கு தூத்துக்குடி மாவட்ட பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே மும்பையில் இருந்து வந்த மற்றும் தூத்துக்குடியில் இருந்து சென்ற முதலாவது சிறப்பு ரயிலில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. காத்திருப்போர் பட்டியல் 100-க்கும் மேல் காணப்பட்டது. அதுபோல, 2-வது சிறப்பு ரயிலுக்கான முன்பதிவும் ஏற்கெனவே முடிந்துவிட்ட நிலையில் காத்திருப்போர் பட்டியல் அதிகமாக காணப்படுகிறது. பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு ஏற்பட்டுள் ளதால் தூத்துக்குடி- மும்பை கோடை கால சிறப்பு ரயிலை நிரந்தர ரயிலாக இயக்க வேண் டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நிரந்தர ரயிலாகுமா? - இது குறித்து தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்க செயலாளர் மா.பிரம்ம நாயகம் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத் தை சேர்ந்த ஏராளமானோர் மும்பையில் வசிக்கின் றனர். மேலும், இப்பகுதியைச் சேர்ந்தவர் கள் மும்பையில் தொழில் செய்து வருவதுடன், பல்வேறு நிறுவனங்களில் பணி யாற்றியும் வருகின்றனர். அதுபோல தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர்கள் மும்பைக்கு சென்று தான் கப்பல் பணிகளுக்கு செல்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத் தை சேர்ந்த பயணிகள் மும்பைக்கு செல்ல முதலில் கன்னியாகுமரி, நாகர்கோவிலுக்கு சென்று தான் ரயில் பிடித்தனர். தற்போது திருநெல்வேலிக்கு சென்று மும்பை ரயிலை பிடிக்கின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி- மும்பை இடையே நேரடியாக சிறப்பு ரயில் இயக்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. முதல் சிறப்பு ரயிலில் அனைத்து வகுப்புகளிலும் காத்திருப்போர் பட்டியல் வந்துவிட்டது. 2-வது சிறப்பு ரயிலுக்கும் காத்திருப்பு பட்டியல் வந்துவிட்டது.
இந்த ரயிலை நிரந்தர ரயிலாக இயக்கினால் தூத்துக்குடி மாவட்ட பயணிகளுக்கு மிகுந்த வசதியாக இருக்கும். ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக மக்கள் பிரதிநிதிகள் குரல் கொடுக்க வேண்டும். இதேபோல் திருநெல்வேலி- பாலக்காடு பாலருவி விரைவு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். மேலும், கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட தூத்துக்குடி- கோவை இணைப்பு ரயிலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT