Published : 01 Jun 2023 06:50 AM
Last Updated : 01 Jun 2023 06:50 AM
ஈரோடு: ஈரோடு - பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில் தேங்கும் கழிவுநீர் கலந்த மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஈரோட்டில் இருந்து கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம் செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள், ஈரோடு - பெருந்துறை தேசிய நெடுஞ்சாலை வழியாகச் செல்கின்றன. இச்சாலையில் பெருந்துறைக்கு முன்பாக செட்டிதோப்பு பகுதியில் சாக்கடை நீர் கலந்த மழைநீர் தேங்கியுள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், இச்சாலையைக் கடந்து செல்லும் நிலையில் சாலையில் அடிக்கடி தேங்கும் கழிவுநீரால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
பெருந்துறைக்கு அருகே உள்ள கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைநீர் தான் இந்த சாலையில் தேங்கி, பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறுகின்றனர் வாகன ஓட்டிகள். துர்நாற்றத்துடன் சாலையில் நீர் கடந்து செல்வதால், பள்ளி, கல்லூரி மாணவர்கள், இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலையைக் கடக்க முடியாத அவலம் தொடர்கிறது. சாலையில் மழைநீர் தேங்குவதால் விபத்துகளும் ஏற்படுகின்றன.
இதுகுறித்து, பெருந்துறை நகர பாஜக தலைவர் பூரண சந்திரன் கூறியதாவது: கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி வேகமாக வளர்ந்து வருகிறது. 18 வார்டுகளைக் கொண்ட இந்த பேரூராட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். பேரூராட்சியில் தேங்கும் கழிவுநீரை வெளியேற்ற முறையான வடிகால் வசதி செய்யப்படாததால், அவை விளைநிலங்களில் புகுந்து நிலத்தை பாழ்படுத்துகின்றன.
மேலும், செட்டிதோப்பு பகுதியில் ஈரோடு- பெருந்துறை சாலையில் தேங்கி வாகனங்கள் விபத்துக்குள்ளாக வழிவகுக்கின்றன. கருமாண்டி செல்லிபாளையத்தில் கழிவுநீர் வடிகால் வசதி செய்யப்படாததால், கந்தாம்பாளையம், காடபாளையம், செட்டிதோப்பு பகுதிகளில் சாக்கடை நீர் தேங்குகிறது.
மழைக்காலங்களில் இவை ஆறாக ஓடுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் ஏற்படுகின்றன. குப்பையை முறையாக அகற்றி, கழிவுநீர் வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும் என பாஜக சார்பில் மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து, கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சித் தலைவர் செல்வத்திடம் கேட்டபோது, ‘மழைக் காலங்களில் மட்டும் செட்டிதோப்பு பகுதியில் சாலையில் நீர் தேங்குகிறது. அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.
சிறு மழை பெய்தாலே, செட்டி தோப்பு பகுதியில் சாலை வெள்ளக்காடாகி வரும் நிலையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு மட்டும் வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு - பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் தடையின்றி செல்லவும், விபத்துகளைத் தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT