Published : 29 May 2023 08:52 AM
Last Updated : 29 May 2023 08:52 AM
அரக்கோணம்: அரக்கோணம், ஜோலார்பேட்டை நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே மெட்ரோ ரயில் விரைவில் இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் இந்தியாவின் முதல் ரயில் பாதையாக கடந்த 1853-ம் ஆண்டு சென்னை ராயபுரத்தில் இருந்து அரக்கோணம் வழியாக வாலாஜா வரை ரயில் பாதை அமைக்கப்பட்டது. வரலாற்று சிறப்புகள் வாய்ந்த அரக்கோணம் ரயில் நிலையம் தற்போது, தென்னக ரயில்வே சென்னை கோட்டத்தின் கீழ் இயங்கி வரும் மிக முக்கியமான ரயில்வே சந்திப்பாகவும் உள்ளது.
தினசரி 200-க்கும் மேற்பட்ட ரயில்கள் இந்த வழித்தடம் வழியாக இயக்கப்படுகின்றன. சென்னை கோட்டத்துக்கு வருவாய் ஈட்டித்தரும் முக்கிய ரயில் நிலையமாகவும் உள்ளது. அரக்கோணம் வழியாக சென்னைக்கு தினசரி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை, கல்வி உட்பட பல்வேறு தேவைகளுக்காக இந்த ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல் வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சென்னை கோட்டத்தில் அம்ரீத் பாரத் திட்டத்தின் மூலமாக 15 ரயில் நிலையங்களில் உட் கட்டமைப்புகளை மேம்படுத்த அறிவிக்கப்பட்ட பட்டியலில் அரக்கோணமும் இடம் பெற்றுள்ளது. அதற்கான பணிகளை தொடங்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
அதேபோல், வந்தே பாரத் ரயிலும் அரக்கோணம் வழியாக இயக்கப்படுகிறது. இதுவரை பயணிகள் இந்த ரயிலில் அமர்ந்து மட்டும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு வந்தது. தற்போது, வந்தே பாரத் ரயிலில் படுக்கை வசதிகள் கொண்டதாகவும், மின்சார ரயில்களுக்கு மாற்றாக இயக்குவதற்காக, வந்தே மெட்ரோ ரயில்கள் தயாரிப்பு பணிகளும் ரயில்வே துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, அரக்கோணம்- ஜோலார் பேட்டை போன்ற நகரங் களை இணைக்கும் மின்சார ரயில்களுக்கு மாற்றாக இயக்குவதற்காக வந்தே மெட்ரோ ரயில் தயாரிக்கும் பணிகளும் மேற்கொள் ளப்படுகிறது.
இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பயணிகள் சேவைக்காக இயக்கப்படவும் உள்ளது என ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறையின் மூலமாக அரக்கோணம் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் மேற்கொண்டு வந்தபோதும், இன்னமும் இங்கு பயணிகளின் குறைகள் நீடித்து வருகிறது. அம்ரீத் பாரத் திட்டத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளில் பயணிகளின் குறைகளை தீர்க்க முன்னுரிமை அளிக்க வேண்டுமென கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது.
இதுகுறித்து தென்னக ரயில்வே மண்டல பயணிகள் ஆலோசனை குழு உறுப்பினரும், அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத் தலைவருமான நைனா மாசிலாமணி கூறும்போது, "வரலாற்று சிறப்பு வாய்ந்த ரயில் நிலையமாக அரக்கோணம் உள்ளது. இங்கு, 8 நடை மேடைகள் உள்ளன. பலதரப் பட்ட மக்கள் அதிகளவில் பயணம் செய்து வரு கின்றனர். ரயில் நிலையத்தை மேம்படுத்த பல்வேறு கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், பயணிகளின் நீண்ட நாள் கோரிக் கையாக, ரயிலுக்காக நடை மேடைகளில் காத்திருக்கும் பயணிகளுக்கு பெட்டிகள் எங்கு உள்ளது என்பதை அறிய, மின்சாரத்தில் இயங்கும் ‘கோச் பொசிஷன்’ போர்டு அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும்போது, இவை களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். திருவள்ளூரில் இருந்து வரும் 3, 4-வது அகல ரயில்பாதைகள் குறுக் கும், நெடுக்குமாக உள்ளன. மேல்பாக்கம் ரயில் நிலையம் வெளிப்புறம் சிக்னல் பாயின்ட் வரை பாதைகளை நேராக மாற்ற வேண்டும். இதன் மூலமாக 3, 4, 5 ரயில் பாதைகள் நேராக்கப்பட்டு, நீளம் அதிகரித்து. நிலையம் முழுமையாக இருக் கும். பயணிகள் வசதிகளும் முழுமை பெறும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT