Published : 25 Jul 2014 10:00 AM
Last Updated : 25 Jul 2014 10:00 AM
அரசு ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆரணி ஆற்றில் மணல் கடத்தலை தடுக்கச் சென்ற துணை வட்டாட்சியர் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொசஸ்தலை ஆறு, ஆரணி ஆறு, கூவம் ஆறு மற்றும் ஏரிகளில் மணல், சவுடு மண் ஆகியவை கடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. இதில், ஆரணி ஆற்றில் ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், தண்டலம், வடமதுரை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மணல் கடத்தல் நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், பெரியபாளையம் அருகே உள்ள தும்பாக்கம் பகுதியில் ஆரணி ஆற்றில் மணல் கடத்தல் நடப்பதாக ஊத்துக்கோட்டை துணை வட்டாட்சியர் லதாவுக்கு புதன்கிழமை இரவு 11 மணியளவில் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து துணை வட்டாட்சியர் லதா, தனது கணவர் மோகன், தாராட்சி ஊராட்சி தலையாரி ராமதாஸ், ஓட்டுநர் முனுசாமி ஆகியோருடன் அரசு ஜீப்பில் தும்பாக்கம் பகுதிக்கு விரைந்தார். இதைக் கண்டு மணல் கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் தப்பியோடி விட்டனர்.
இதனால் துணை வட்டாட்சியர் லதா ஊத்துக்கோட்டைக்கு திரும்ப முடிவு செய்தார். சூளைமேனி பகுதியில், எதிரே வந்த லாரிக்கு வழிவிட முயன்ற போது அவர்களது ஜீப் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், துணை வட்டாட்சியர் லதா உள்ளிட்ட நான்கு பேரும் காயமடைந்தனர். அவர்கள், அனைவரும் பெரம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
அரக்கோணம் பகுதியில் சமீபத்தில் மணல் கடத்தலை தடுக்கச் சென்ற போலீஸ்காரர் மணல் டிராக்டரால் மோதப்பட்டு கொல்லப்பட்ட நிலையில், பெண் துணை வட்டாட்சியர் சென்ற ஜீப் கவிழ்ந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT