Published : 25 Apr 2023 04:38 PM
Last Updated : 25 Apr 2023 04:38 PM
மதுரை: கோடை மழை தீவிரமடையும் நிலையில், பராமரிப்பு இல்லாமல் இயக்கப்படும் அரசு பஸ்களில் மழைநீர் ஒழுகுவதால் மக்கள் நனைந்தபடியே பயணம் செய்கின்றனர். பழுதடைந்த அரசு பஸ்களை சீரமைக்க போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகம் முழுவதுமே கடந்த சில நாளாக கோடை மழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் பலத்த சூறாவளி காற்றுடன் நல்ல மழை பெய்கிறது. மாலை முதல் நள்ளிரவு வரை இந்த மழை பெய்கிறது. மழைக்கு மரங்கள் வேரோடு சாய்ந்து விழுகின்றன. மின் வயர்கள் அறுந்து குடியிருப்பு பகுதிகளில் மின் தடை ஏற்படுகிறது. மின்வாரிய ஊழியர்கள் பெரும் பாடுப்பட்டு மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி தடைப்பட்ட மின் விநியோகத்தை மீண்டும் வழங்கி கொண்டிருக்கின்றனர்.
மழை பெய்தாலும் மக்கள் வேலை, மருத்துவம், உறவினர் வீட்டு விஷேசங்கள் உள்ளிட்ட பல்வேறு நிமித்தமாக அரசு பஸ்களில் வெளியூர் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. மதுரை, கோவை, திருநெல்வேலி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு அரசு போக்குவரத்துக் கழகத்திற்குட்பட்ட அரசு பஸ்கள் மதுரை மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் பஸ் நிலையம் வந்து செல்கின்றனர். அதுபோல், மதுரை மாநகர பஸ்களில் ஏராளமான டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பஸ் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டும் அரசு பஸ்கள் சரியான பராமரிப்பு இல்லாமல் இயக்கப்படுகின்றன. ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தும், படிக்கட்டுகள் சேதமடைந்தும், இருக்கைகள் சிலதமடைந்தும் உள்ளன. போதிய பஸ்கள் இயக்கப்படாததாதல் அரசு பஸ்களில் மக்கள் நின்றுகொண்டே பயணம் செய்யும் அவலம் நீடிக்கிறது. தற்போது கோடை மழை பெய்வதால் அரசு பஸ்களில் மழை நீர் புகுந்து வருகிறது. கடந்த காலத்தில் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தும், கண்ணாடி இல்லாமலும் இருந்ததால் மழை தூறல் பஸ்கள் வந்து இருக்கைகளில் அமர முடியாமல் பயணிகள் நின்று கொண்டே பயணம் செய்வார்கள்.
ஆனால், தற்போது பஸ் மேற்கூரைகளே சேதமடைந்து மழை நீர் பேருந்துக்குள் வடிக்கிறது. சமீபத்தில் மதுரையில் கனமழை பெய்து கொண்டிருந்தபோது மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து உசிலம்பட்டி நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்றில் பஸ்சுக்குள்ளே மழை நீரானது அருவி போல கொட்டத் தொடங்கியது. இதனால் பஸ்ஸில் அமர்ந்து பயணித்த பயணிகள் நின்று கொண்டு பயணிக்க கூடிய நிலை ஏற்பட்டது. மேலும், அந்த பஸ்ஸில் இருந்த மின்விளக்குகள் பெரும்பாலானவை எரியாததால் ஒரு பகுதி முழுவதிலும் இருள மூழ்கிக் காணப்பட்டது.
கோபமடைந்த பயணிகள் “நாங்கள் காசு கொடுத்துதான வர்றோம், ஏன் இப்படி அரசு பஸ்ஸில் மழை தண்ணி ஒழுகுது, லைட் இல்லை” என் நடத்துநரிடம் வாக்குவாதம் செய்தனர். நடத்துநர் “நான் என்ன செய்ய முடியும்?” என்று பொதுமக்கள் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் தடுமாறினார். மழை நேரத்தில் இதுபோல் அரசு பஸ்களில் மழைநீர் ஒழுகுவதால் அதில் பயணிக்கும்போது மழைநீரில் நனைந்தபடி குழந்தைகளும் முதியவர்களும் செல்கின்றனர். உசிலம்பட்டி சென்ற அரசு பஸ்ஸில் மழைநீர் ஒழுகிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT