Published : 13 Apr 2023 07:20 AM
Last Updated : 13 Apr 2023 07:20 AM
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் சிட்டீஸ் (CITIIS) திட்டத்தின் கீழ், சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு கிரிக்கெட் மற்றும் கால்பந்து பயிற்சி தொடக்கவிழா சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கிரிக்கெட், கால்பந்து பயிற்சியை தொடங்கிவைத்து, மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
மேலும், கிரிக்கெட் பயிற்சியளிக்கும் ஜெனரேசன் நெக்ஸ்ட் கிரிக்கெட் அகாடமியின் இயக்குநர் ப்ரீத்தி அஸ்வின், கால்பந்து பயிற்சியளிக்கும் கிரேட் கோல்ஸ் அறக்கட்டளை நிறுவனத்தின் இயக்குநர்கள் பிரியா கோபாலன் மற்றும் சந்தியா ராஜன் ஆகியோரிடம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
விழாவில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன், மேயர் ஆர். பிரியா, இந்திய கிரிக்கெட் வீரர் ஆர்.அஸ்வின், பிரெஞ்சு துணைத் தூதர் லிசா டால்பட் பாரே, முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி கலந்து கொண்டனர்.
சிட்டீஸ் திட்டத்தில் முதல்கட்டமாக, பெருநகர சென்னை மாநகராட்சியில் குறிப்பிட்ட பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து, அப்பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், மின் ஆளுமையாக மாற்றியமைத்தல், கல்வியின் தரத்தை உயர்த்த ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல், கலை, இலக்கியம் மற்றும் விளையாட்டு போன்ற முக்கியக் கூறுகளை மேம்படுத்த ரூ.95.25 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன் தொடர்ச்சியாக. விளையாட்டுகளில் மாணவர்களின் ஈடுபாடு மற்றும் பங்கை அதிகரிக்க ஏதுவாக, சிட்டீஸ் (CITIIS) திட்டத்தின் கீழ், சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு கிரிக்கெட் மற்றும் கால்பந்து பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் பயிற்சியானது ரூ.19 லட்சம் மதிப்பில் ஜெனரேசன் நெக்ஸ்ட் அகாடமியின் மூலம், இந்திய கிரிக்கெட் வீரர் ஆர். அஸ்வின் வழிகாட்டுதலின்படி வழங்கப்பட உள்ளது.
நுங்கம்பாக்கம் சென்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர் கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்வதற்கு ஏதுவாக, 6 பயிற்சி தளங்கள் நவீன முறையில் உருவாக்கப்பட்டு முடிவுறும் தருவாயில் உள்ளன. இதேபோல, கால்பந்து பயிற்சியானது ரூ.8 லட்சம் மதிப்பில் கிரேட் கோல்ஸ் அறக்கட்டளை என்கிற கால்பந்து பயிற்சி நிறுவனத்தின் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT