Published : 12 Apr 2023 05:48 AM
Last Updated : 12 Apr 2023 05:48 AM

ஐஆர்சிடிசி சார்பில் 12 நாள் புண்ணிய தீர்த்த யாத்திரை சிறப்பு ரயில்: மே 4-ம் தேதி தொடங்குகிறது

திருச்சி: ஐஆர்சிடிசி சார்பில் 12 நாள் புண்ணிய தீர்த்த யாத்திரை சிறப்பு ரயில் சுற்றுலா தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐஆர்சிடிசி நிர்வாக இயக்குநர் கே.ரவிக்குமார் மற்றும் துணை பொது மேலாளர் (சுற்றுலா) எல்.சுப்பிரமணி ஆகியோர் திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

ஐஆர்சிடிசி சார்பில் சுற்றுலாப் பயணிகளுக்கான பிரத்யேக பாரத் கவுரவ் சுற்றுலா ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ரயிலில் 4 குளிர்சாதனப் பெட்டிகள், 7 தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் உள்ளன. இதில் 752 பேர் பயணிக்க முடியும். இந்த சுற்றுலா ரயிலின் முதல் ஓட்டத்தில், தென் மண்டலம் சார்பில் புண்ணிய தீர்த்த யாத்திரை மேற்கொள்ளப்பட உள்ளது.

இதில், மே 4-ம் தேதி தொடங்கி 12 நாட்கள் மேற்கொள்ளப்படும் இந்த யாத்திரையில் பூரி, கோனார்க், கொல்கத்தா, கயா, வாரணாசி, அயோத்தி மற்றும் அலகாபாத் உள்ளிட்ட இடங்களை பார்வையிடலாம்.

இந்த யாத்திரையின்போது பயணிகள் தங்கும் வசதி, உள்ளூர் போக்குவரத்து, உணவு, மருத்துவ வசதி, பாதுகாவலர் வசதி, சுற்றுலா வழிகாட்டி வசதி உள்ளிட்டவை ஐஆர்சிடிசி சார்பில் வழங்கப்படும்.

கட்டணம் நிர்ணயம்: இதற்கான கட்டணமாக ஒரு நபரின் ஏ.சி பயணத்துக்கு ரூ.35,651-ம், ஏசி அல்லாத பயணத்துக்கு ரூ.20,367-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்த யாத்திரையில் பயணம் செல்ல விரும்புபவர்கள் www.irctctourism.com என்ற இணையதளத்திலோ, சென்னை, மதுரை, திருச்சி, கோவையில் உள்ள பிரதான ரயில் நிலையங்களிலோ முன்பதிவு செய்துகொள்ளலாம்.

பயணிகள் ஏறும் நிலையங்கள்: கேரள மாநிலம் கொச்சுவேலியிலிருந்து புறப்படும் இந்த ரயிலில், தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து பயணிகள் ஏறிக் கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x