Last Updated : 07 Apr, 2023 08:01 PM

2  

Published : 07 Apr 2023 08:01 PM
Last Updated : 07 Apr 2023 08:01 PM

முதல் 2 நாட்களுக்கு முழுமையாக நிரம்பிய கோவை - சென்னை ‘வந்தே பாரத்’ ரயிலின் இருக்கைகள்!

கோவை - சென்னை இடையே இயக்கப்பட உள்ள 'வந்தே பாரத்' ரயிலில், ஏசி சேர் கார் வகுப்பின் உட்புறத் தோற்றம்

கோவை: 'வந்தே பாரத்' ரயிலில் கோவையில் இருந்து சென்னை பயணிக்க கட்டணமாக ஏசி சேர் கார் வகுப்பில் ரூ.1,215, எக்ஸிகியூட்டிவ் சேர் காரில் ரூ.2,310 நிர்ணயம்: முதல் இரண்டு நாள் பயணத்துக்கான இருக்கைகள் முழுமையாக நிரம்பின

'வந்தே பாரத்' ரயிலில் கோவையில் இருந்து சென்னை பயணிக்க ஏசி சேர் கார் வகுப்பில் ரூ.1,215, எக்ஸிகியூட்டிவ் சேர் கார் வகுப்பில் ரூ.2,310 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னை-கோவை இடையிலான 'வந்தே பாரத்' ரயில் சேவையை நாளை (ஏப்.8) பிரதமர் நரேந்திரமோடி தொடங்கிவைக்க உள்ளார். அதைத் தொடர்ந்து, கோவை - சென்னை சென்ட்ரல் இடையிலான 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 20644), நாளை மறுதினம் (ஏப்.9) முதல் கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, காலை 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடையும். சென்னை சென்ட்ரல் - கோவை இடையிலான 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 20643), மதியம் 2.25 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, இரவு 8.15 மணிக்கு கோவை ரயில்நிலையம் வந்தடையும்.இந்த ரயில்கள் புதன்கிழமை தவிர வாரத்தின் மற்ற 6 நாட்களும் இயக்கப்படும். மொத்தம் 8 ஏசி பெட்டிகளுடன் இந்த ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இந்நிலையில், இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கியது. ஏசி சேர் கார் வகுப்பில் கோவையிலிருந்து சென்னை பயணிக்க (உணவுடன்) கட்டணமாக ரூ.1,215-ம், எக்ஸிகியூட்டிவ் சேர் கார் வகுப்பில் பயணிக்க (உணவுடன்) கட்டணமாக ரூ.2,310 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு தொடங்கியவுடன் முதல்இரண்டுநாள் பயணத்துக்கான இருக்கைகள் வேகமாக முன்பதிவாகின. இன்று மாலை நிலவரப்படி ஏசி சேர் கார், எஎக்ஸிகியூட்டிவ் சேர் கார் என இரு வகுப்புகளிலும் உள்ள இருக்கைகள் முழுமையாக நிரம்பி, காத்திருப்பு பட்டியலுக்கு சென்றது.

உணவுக்கு தனி கட்டணம்: இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ''ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது Food Choice என்பதில் சைவ உணவு, அசைவு உணவு, உணவு தேவையில்லை என மூன்று தேர்வுகள் இருக்கும். அதில், உணவு தேவையில்லை என குறிப்பிட்டால், கோவையில் இருந்து சென்னைக்கு ஏசி சேர் கார் வகுப்பில் செல்ல டிக்கெட் கட்டணமாக ரூ.1,080, ஆன்லைன் முன்பதிவுக்கு ரூ.35 என மொத்தம் ரூ.1,115 பெறப்படுகிறது.

சைவம், அசைவ உணவு இவற்றில் ஒன்றை தேர்வு செய்தால், டிக்கெட் கட்டணமாக ரூ.1,215, ஆன்லைன் முன்பதிவுக்கு ரூ.35 என மொத்தம் ரூ.1,250 பெறப்படுகிறது. உணவு தேவையில்லை என குறிப்பிட்டு, கோவையில் இருந்து சென்னைக்கு எக்ஸிகியூடிவ் சேர் கார் வகுப்பில் பயணிக்க டிக்கெட் கட்டணமாக ரூ.2,140, ஆன்லைன் முன்பதிவுக்கு ரூ.35 என மொத்தம் ரூ.2,175 பெறப்படுகிறது. சைவம், அசைவ உணவு இவற்றில் ஒன்றை தேர்வு செய்தால், டிக்கெட் கட்டணமாக ரூ.2,310, ஆன்லைன் முன்பதிவுக்கு ரூ.35 என மொத்தம் ரூ.2.345 பெறப்படுகிறது.'' இவ்வாறு அவர்கள் கூறினர்.

3 ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்: கோவையில் இருந்து 'வந்தே பாரத்' ரயில் புதிதாக இயங்குவதை முன்னிட்டு வரும் 9-ம் தேதி முதல், இங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் 3 எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, கோவை-பெங்களூரு இடையிலான 'டபுள் டெக்கர்' எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:22666) கோவையில் இருந்து காலை 5.40 மணிக்கும், கோவை-திருப்பதி இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 22616) காலை 6.10 மணிக்கும், கோவை-சென்னை சென்ட்ரல் இடையிலான இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 12680) காலை 6.20 மணிக்கும் புறப்பட்டுச் செல்லும் என சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x