Published : 04 Apr 2023 07:10 AM
Last Updated : 04 Apr 2023 07:10 AM
சென்னை: கோவை - சென்னை இடையே இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ ரயில் செல்லும் வழித்தடத்தில் இயக்கப்படும் பிற ரயில்களின் நேரத்தை மாற்ற வேண்டும் என்று ரயில்வே அமைச்சகத்துக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மத்தியரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்-வுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஜி.கே.வாசன் கூறியிருப்பதாவது: மத்திய அரசு, மக்களுக்கான போக்குவரத்தில் கவனம் செலுத்தியதால் இந்தியா முழுவதும் ‘வந்தே பாரத்’ என்ற புதிய அதிவிரைவு ரயில் சேவையை தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இந்த நேரத்தில் தமிழகத்திலும் ‘வந்தே பாரத்’ ரயில் இயக்கப்படுவது உகந்த பணியை சரியான நேரத்தில் செய்வதற்கு சமமானது.
அந்த வகையில் வரும் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி 11-வது ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை தமிழகத்தில் சென்னையில் தொடங்கி வைக்கிறார். இதற்காக பிரதமருக்கும், மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த ‘வந்தே பாரத்’ ரயில்கோவையில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து கோவைக்கும் இயக்கப்பட இருக்கிறது. கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக சென்னைக்கு மதியம் 12.10 மணிக்கு சென்றடையும்.
இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம் தவிர வேறு எங்கும் நிற்பதில்லை. மறு மார்க்கத்தில் சென்னையில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்படும் ‘வந்தே பாரத்’ ரயில் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கோவைக்கு இரவு 8.30 மணிக்கு சென்றடையும்.
இந்த ரயில் இயக்கப்படும் நேரத்துக்கு முன்பாக ஏற்கெனவே நடைமுறையில் இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் காலை 6.15 மணிக்கும், மங்களூர் – சென்னை வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 7.25 மணிக்கும் கோவையில் இருந்து புறப்பட்டு சென்னை சென்றடைகிறது. அதாவது குறுகிய கால இடைவெளியில் தொடர்ந்து அடுத்தடுத்து 3 ரயில்கள் இயக்கப்படுகின்றன.
எனவே மத்திய அரசும், மத்திய ரயில்வே அமைச்சகமும் ‘வந்தே பாரத்’ ரயில் செல்லும் வழித்தடத்தில் செல்லும் மற்ற ரயில்களின் பயண நேரத்தை, ரயில் பயணிகளின் வசதிக்கேற்ப மாற்ற பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு மத்திய ரயில்வேஅமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்-வுக்கு ஜி.கே.வாசன் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT