Published : 13 Jul 2014 10:00 AM
Last Updated : 13 Jul 2014 10:00 AM
தருமபுரி மாவட்டம் பெரும்பாலை அருகே பிஞ்சுக் குழந்தைகளை தந்தையே அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பெரும்பாலை அடுத்த பாரதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (28). லாரி ஓட்டுநர். இவரது மனைவி கோகிலா (24). இவர்களுக்கு மோகனப்பிரியா (6), தமிழ்ச்செல்வன் (4), தெய்வானை (1) என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. குடிப்பழக்கம் கொண்ட சதீஷ்குமார் கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிப்புக்கும் ஆளாகி சிகிச்சை பெற்றுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபம் அடைந்த கோகிலா காவக்காட்டில் உள்ள தன் பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
அன்று மாலை மது குடித்த நிலையில் கோகிலாவைத் தேடிச்சென்ற சதீஷ்குமார் தன்னுடன் வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். கோகிலா மறுத்ததால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் குழந்தைகள் தமிழ் செல்வன் (4), தெய்வானை (1) ஆகிய இருவரையும் கட்டாயப்படுத்தி சதீஷ்குமார் தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். தாயைப் பிரித்து அழைத்து வரப்பட்ட குழந்தைகள் நள்ளிரவில் தாயிடம் செல்ல வேண்டும் என அடம்பிடித்து அழுதுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் இரண்டு குழந்தைகளையும் சுவற்றில் அடித்து கொலை செய்துள்ளார். சப்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் திரண்டபோது சதீஷ்குமார் தப்பியோடியுள்ளார்.
பின்னர் காவல்துறையினர் இரண்டு பிஞ்சுக் குழந்தைகளின் சடலங்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெரும்பாலை காவல்துறையினர் தலைமறைவாக உள்ள சதீஷ்குமாரைத் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT