Published : 20 Mar 2023 06:20 AM
Last Updated : 20 Mar 2023 06:20 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன் தினம் இரவு மழை பெய்த நிலையில், நேற்று பகலில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. அந்தியூரில் பலத்த காற்றால், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைமரங்கள் சேதமடைந்தன.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் வெப்பத்தின் அளவு மூன்று முறை 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தொட்டுள்ளது. பகல் நேரத்தில் அனல் காற்றுடன் வெயில் கொளுத்தும் நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், கடந்த இரு நாட்களாக இரவில் மழை பெய்து வருகிறது.
சத்தியமங்கலம், கோபி, தாளவாடி, பவானிசாகர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் இரவு ஈரோடு நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்த நிலையில், அந்தியூர், வரட்டுப்பள்ளம், சத்தியமங்கலம் நம்பியூர், கோபி, பவானி, மொடக்குறிச்சி, அம்மாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.
கோபியை அடுத்த எல்லமடை பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்பவரது தோட்டத்தில் உள்ள தென்னைமரத்தில் மின்னல் தாக்கியதில் தீப்பற்றியது. தொடர் மழை பெய்ததால், தீ அணைந்து, பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
அந்தியூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், புதுக்காடு, ஊஞ்சக்காடு, வட்டக்காடு, கரட்டுப்பாளையம், ஆயிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைமரங்கள் சாய்ந்து சேதம் ஏற்பட்டது. மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.
ஈரோடு மாவட்ட மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்)
வரட்டுபள்ளம்- 37, சத்தியமங்கலம்- 23, குண்டேரிப் பள்ளம் -19.2, நம்பியூர் -18, கோபி - 13.2, ஈரோடு - 9, பவானி - 8, பவானிசாகர் - 7.6, எலந்தைகுட்டைமேடு - 5, மொடக் குறிச்சி - 3, அம்மாப்பேட்டை - 2.
பகலில் 100 டிகிரி வெப்பம்: ஈரோட்டில் நேற்று முன் தினம் இரவு மழை பெய்த நிலையில், நேற்று காலை முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேற்று முன் தினம் 99.68 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவான நிலையில், நேற்று 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இரவில் மழையும், பகலில் வெப்பத்தின் தாக்கமும் அதிகமாக இருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பகல் நேரத்தில் வெயில் கொளுத்தும் நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், கடந்த இரு நாட்களாக இரவில் மழை பெய்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT