Published : 19 Mar 2023 04:00 AM
Last Updated : 19 Mar 2023 04:00 AM

சென்னை ஐ.சி.எஃப்-ல் தயாரிக்கப்பட்ட 11-வது வந்தே பாரத் ரயில்: அடுத்த வாரம் டெல்லி - ஜெய்ப்பூர் இடையே இயக்க முடிவு

சென்னை: நாட்டின் மிகப் பெரிய ரயில்பெட்டி தயாரிப்புத் தொழிற்சாலையாக சென்னை ஐ.சி.எஃப். திகழ்கிறது. இந்த ஆலையில் தற்போது வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 10 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த ரயில்கள் டெல்லி - வாரணாசி, டெல்லி - காத்ரா, காந்திநகர் - மும்பை, டெல்லி - யுனா (இமாச்சல பிரதேசம்), சென்னை - மைசூரு, பிலாஸ்பூர் - நாக்பூர், ஹவுரா - நியூ ஜல்பைகுரி, செகந்திராபாத் - விசாகப்பட்டினம், மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம் - சாய்நகர் ஷீரடி, சோலப்பூர் - மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம் இடையே இயக்கப்படுகின்றன. இந்த வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

இதையடுத்து, வந்தே பாரத்ரயில் தயாரிப்பை அதிகப்படுத்த ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, சென்னை ஐ.சி.எஃப்-ல் 2023-24 நிதியாண்டில் 736 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளன. தலா 16 பெட்டிகள் கொண்ட 46 வந்தே பாரத் ரயில்கள் அல்லது தலா 8 பெட்டிகள் கொண்ட 92 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐ.சி.எஃப்-ல் தயாரிக்கப்பட்ட 11-வது வந்தே பாரத் ரயில், ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: நாட்டின் வெவ்வேறு நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றுக்கு பயணிகள் இடம் அதிக வரவேற்பு உள்ளது.எனவே, மேலும் பல வந்தே பாரத்ரயில்களைத் தயாரித்து, வழங்குமாறு சென்னை ஐ.சி.எஃப்.க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது, ஐ.சி.எஃப்-ல் 11-வது வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணி முடிந்து, ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில், ஜெய்ப்பூர் - டெல்லி இடையே அடுத்த வாரம் இயக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை வடமேற்கு ரயில்வே மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x