Published : 17 Mar 2023 07:02 AM
Last Updated : 17 Mar 2023 07:02 AM

மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி: மெரினாவில் காந்தி சிலை தற்காலிகமாக இடமாற்றம்

சென்னை: மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிக்காக, மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படவுள்ளது. தற்போது உள்ள இடத்திலிருந்து 25 மீட்டர் தொலைவில் காந்தி சிலை வைக்கப்படவுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருவதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி தெரிவித்தார்.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் ஒன்று கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி பைபாஸ் வரையிலான வழித்தடம் (26.1 கி.மீ.) ஆகும்.

இந்த வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் வரைசுரங்கப் பாதையாகவும், பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை உயர்மட்டப் பாதையாகவும் அமையும். உயர்மட்டப் பாதை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சுரங்கப்பாதை பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, கலங்கரை விளக்கம் சுரங்கமெட்ரோ ரயில் நிலையம் மற்றும் அதனுடன் தொடர்புடையசுரங்கப்பாதை கட்டுமானப் பணி விரைவில் தொடங்கவுள்ளது. இதற்காக, மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகே கட்டுமான பூர்வாங்க நடவடிக்கையாக, சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குத் தடுப்புகளை மெட்ரோ ரயில் நிறுவனம் அமைத்துள்ளது.

இந்நிலையில், மெரினாவில் உள்ள காந்தி சிலை 25 மீட்டர் தொலைவில் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படவுள்ளது. இதற்காக, புதிய பீடம் அமைக்கப்படுகிறது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: மெரினாவில் தற்போது காந்தி சிலை இருக்கும் இடத்திலிருந்து 25 மீட்டர் தொலைவில் புதிய இடத்தில் தற்காலிகமாக வைக்கப்படும். இதற்காக, அந்த இடத்தில் பீடம் அமைக்கும் பணி நடைபெறுகிறது.

ராட்சத கிரேன் உதவியுடன் சிலை எடுத்துச் செல்லப்பட்டு, புதிய இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும். 10 நாள்களுக்குள் புதிய இடத்துக்கு மாற்றும் பணி நடைபெறும். மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் முடிந்த பிறகு, மீண்டும் பழைய இடத்தில் காந்தி சிலை வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x