Published : 12 Jul 2014 01:17 PM
Last Updated : 12 Jul 2014 01:17 PM

பதிவு தவறுகளை ஒரு மாதத்தில் சரி செய்ய வேண்டும்: மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு

வேலைவாய்ப்பு அலுவலக பதிவு விவரங்களில் ஏற்படும் தவறுகளை சுட்டிக்காட்டுவதற்கு, வேலைவாய்ப்பு இணையதளத்தில் தனி வசதி ஏற்படுத்தவும், அதில் தெரிவிக்கப்படும் குறை களை ஒரு மாதத்தில் நிவர்த்தி செய்யவும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரத்தைச் சேர்ந்த எம்.எஸ். அணில்குமார், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்:

நான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன். பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. இதனால், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் என் பெயரை பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதோர் பட்டியலில் சேர்க்க 1989-ல் விண்ணப்பித்தேன். 2009-ல் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் பிரிவில், பலரது பெயர் அரசு வேலைவாய்ப்புக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அந்தப் பட்டியலில் எனது பெயர் இடம்பெறவில்லை. எனக்கு பின்னால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர் களின் பெயர்கள் இருந்தன.

இதுகுறித்து விசாரித்தபோது, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் எனது பெயர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதோர் பட்டியலில் சேர்ப்பதற்கு பதில், தேர்ச்சி பெற்றோர் பட்டியலில் தவறுத லாகச் சேர்த்தது தெரியவந்தது. இதையடுத்து வேலைவாய்ப்பு அலுவலக ஆவணத்தில் திருத்தம் செய்ய மனு செய்தேன். அதன்படி 2011-ல் திருத்தம் செய்யப்பட்டது.

இதையடுத்து, அரசு வேலைக்கு எனது பெயரை பரிந்துரைக்க மனு கொடுத்தேன். ஆனால், அரசு வேலைக்கான வயது முதிர்ச்சி அடைந்ததாகக் கூறி, என் பெயரை பரிந்துரைக்க மறுத்து மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 2012-ல் உத்தரவிட்டார். அந்த உத்தரவை ரத்து செய்து, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதோர் கல்வித் தகுதிக்குரிய ஏதாவது ஒரு அரசுப் பணிக்கு எனது பெயரை பரிந்துரைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்தார். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சி.கிஷோர் வாதிடுகையில், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான வயது வரம்பு 30-லிருந்து 32 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், வேலை நியமன தடைச் சட்டம் நீக்கப்பட்ட பிறகு வழங்கப்பட்ட 5 ஆண்டு வயது சலுகையும் மனுதாரருக்கு பொருந்தும். எனவே அவருக்கு வயது முதிர்ச்சி ஏற்படவில்லை. வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவேட்டில் தவறுதலாக பதிவு செய்யப்பட்டதற்கு மனுதாரர் காரணமாக மாட்டார். எனவே, மனுதாரரின் பெயரை அரசு வேலைக்கு பரிந்துரைக்க வேண்டும் என்றார்.

நீதிபதி பிறப்பித்த உத்தரவு

மனுதாரர் தன் குறையைத் தொடர்ந்து தெரிவித்து வந்துள்ளார். ஆனால், அவரது கோரிக்கையை அதிகாரிகள் காது கொடுத்து கேட்காமல் இருந்துள்ளனர். மனுதாரரின் பெயரை அரசு வேலைவாய்ப்புக்கு 6 வாரங்களில் பரிந்துரைக்க வேண்டும்.

இந்தியா போன்ற நாடுகளில் லட்சக்கணக்கான இளைஞர்கள் என்றைக்காவது ஒருநாள் தங்களுக்கு அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வயது, பெயர், கல்வித் தகுதி, அனுபவம் மற்றும் தொழில்நுட்ப விவரங்களைக் குறிப்பிடுவதில் தவறு நிகழ்வது பொதுவானது. இந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதை தடுக்க, வேலைவாய்ப்பு அலுவலகத்தின் tnvelaivaaipu.gov.in என்ற இணையதளத்தில் குறைகளைத் தெரிவிக்க தனி வசதி ஏற்படுத்த வேண்டும்.

அந்த வசதியைப் பயன்படுத்தி, யாராவது குறைகள் தெரிவித்தால், அந்தக் குறைகளை ஒரு மாதத்தில் நிவர்த்தி செய்து குறைகளை தெரிவித்தவருக்கு கணினி அத்தாட்சி வழங்குவதற்கு அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலக பதிவில் தவறு ஏற்பட்டால், பதிவு செய்த நபர் வேலைக்கு செல்லும்போது பிரச்சினையை சந்திக்க வேண்டியது வரும். இதனால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று நீதிபதி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x