Published : 13 Mar 2023 07:13 AM
Last Updated : 13 Mar 2023 07:13 AM
சென்னை: சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, முதல் கட்டத் திட்டப் பணிகள் முடிவடைந்து, விமானநிலையம்-விம்கோ நகர், பரங்கிமலை-சென்னை சென்ட்ரல் என இரு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவில், 52 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதற்கிடையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில், 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.
மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தில் 45.8 கி.மீ. தொலைவுக்கும், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 4-வது வழித்தடத்தில் 26.1 கி.மீ. தொலைவுக்கும், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில் 47 கி.மீ. தொலைவுக்கும் மெட்ரோரயில் பாதைக்கான திட்டப்பணிகள் நடைபெறுகின்றன. இந்த பணிகளை2025-ம் ஆண்டு இறுதிக்குள் முடித்து,மெட்ரோ ரயில்களை இயக்கஇலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் நிறைவடைந்த பிறகு, 3 வழித்தடங்களில் ஒவ்வொரு 2 நிமிடத்துக்கும் ரயில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இரண்டாம் கட்டமெட்ரோ ரயில் திட்டம் 3 ஆண்டுகளில் முடிந்த பிறகு, 3 வழித்தடங்களில் ஓட்டுநர் இல்லாத 138 ரயில்கள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் இந்த 3வழித்தடங்களில் 4 நிமிடம் முதல் 10 நிமிடத்துக்கு ஒரு ரயில்கள் இயக்கத் திட்டமிட்டுள்ளோம். ரயில் பயணிகள் அதிகரிக்கும்போது, கூடுதல் ரயில்களை இயக்குவோம். அதாவது, ஒவ்வொரு 2 நிமிடத்துக்கும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 26 மெட்ரோ ரயில்களை தயாரிக்கஅல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கு கடந்தஆண்டு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. 2024 முதல் அவர்கள் ரயில்களை ஒப்படைப்பார்கள். மற்ற வழித்தடங்களில் இயக்கப்படவுள்ள ரயில்களுக்கான ஒப்பந்தம் அடுத்தடுத்த கட்டங்களில் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தற்போது, இரு வழித்தடங்களில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களில் தினமும் 2.50 லட்சம் பேர் பயணிக்கின்றனர். நெரிசல் மிகுந்த நேரங்களில் விமான நிலையம்-விம்கோநகர் வழித்தடத்தில் 5 நிமிடத்துக்குஒரு மெட்ரோ ரயில் சேவையும்,சென்ட்ரல்-பரங்கிமலை வழித்தடத்தில் 10 நிமிடத்துக்கு ஒருமெட்ரோ ரயில் சேவையும் வழங்கப்படுகிறது.
மேலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், 4பெட்டிகளை 6 பெட்டிகளாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT