Published : 11 Mar 2023 04:30 AM
Last Updated : 11 Mar 2023 04:30 AM

தமிழகத்தில் பொன்விழா காணும் ‘பெண் போலீஸ்’ - முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மார்ச் 16-ம் தேதி விழா நடத்த திட்டம்

லத்திகா சரண், திலகவதி, முதல் எஸ்ஐ உஷாராணி

இ.ராமகிருஷ்ணன்

சென்னை: தமிழக காவல் துறையில் பெண் போலீஸார் நியமிக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 16-ம் தேதி பொன்விழா கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1973-ல் திமுக ஆட்சியில், கருணாநிதி முதல்வராக இருந்தபோது முதன்முதலாக பெண் காவலர்கள் பணியில் சேர்க்கப்பட்டனர்.

ஒரு எஸ்.ஐ., ஒரு தலைமைக் காவலர், 20 காவலர்கள் என மொத்தம் 22 பெண்கள் முதன்முதலில் பணியமர்த்தப்பட்டனர். 1976-ல் தமிழ்நாடு பிரிவில் முதல் ஐபிஎஸ் அதிகாரிகளாக தருமபுரியின் திலகவதியும், கேரளாவின் லத்திகா சரணும் பொறுப்பேற்றனர். தமிழகத்தில் தற்போது ஒரு டிஜிபி, 2 கூடுதல் டிஜிபி, 14 ஐ.ஜி. உட்பட 23,542 பெண் காவலர்கள் பணியாற்றுகின்றனர்.

1992-ல் அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது காவல் துறையில் புதிய அத்தியாயமாக, சென்னை ஆயிரம்விளக்கில் முழுவதும் பெண்களைக் கொண்ட அனைத்து மகளிர் காவல் நிலையம் தொடங்கப்பட்டது. தற்போது தமிழகம் முழுவதும் 202 மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன. 2004 ஜனவரியில் நாட்டிலேயே முதல்முறையாக அதிரடிப்படை, கமாண்டோ படை, விரைவு அதிரடிப்படை ஆகியவற்றை உள்ளடக்கிய அனைத்து மகளிர் போலீஸ் படையை (பெண் போலீஸ் பட்டாலியன்) அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். தமிழகத்தின் முதல் பெண் டிஜிபியாக லத்திகா சரண் 2009-ல்பணியமர்த்தப்பட்டார்.

தற்போது சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு, பாதுகாப்பு பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் பெண் போலீஸார் திறம்பட பணியாற்றி வருகின்றனர். தேசிய அளவிலான காவலர் திறன் போட்டியிலும் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

தமிழக காவல் துறை பணியில் பெண்கள் சேர்ந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 16-ம்தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பொன்விழா கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இதில், சாதனை படைத்த பெண் போலீஸாருக்கு விருதுகள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளன.

இதுகுறித்து முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி திலகவதி கூறும்போது, ‘‘காவல் துறையில் பெண்கள் கால் பதித்து 50 ஆண்டுகள் ஆவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு பெண் காவலர் சீருடையில் கம்பீரமாக ரோந்து வாகனத்தை ஓட்டிச் செல்வதை பார்க்கும் இளம்பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். தவிர, காவல் பணியில் பெண்கள் இருப்பது, பாதிக்கப்படும் பெண்களுக்கு தைரியம் அளிக்கும். அவர்கள் தயக்கமின்றி புகார் கொடுப்பார்கள்.

இதனால், குற்றம் நடந்தால் காவல் நிலையத்தில் கட்டாயம் புகார் பதிவாகும். இதன்மூலம், பெண்கள் மீதான குற்றங்கள் குறையும். காவல் பணி செய்து சொந்தக் காலில் நிற்பதால், பொருளாதாரத்திலும் பெண்கள் முன்னேற்றத்தை அடைய முடியும்’’ என்றார்.

காவல் துறையின் பல்வேறு பிரிவுகளிலும் பெண்கள் திறன்பட பணியாற்றி வரும் நிலையில், சென்னை காவல் நிலையங்களில் சட்டம் - ஒழுங்கு பணியில் பெண் ஆய்வாளர்கள் புறக்கணிக்கப்பட்டு, குற்றப்பிரிவில் நியமிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதிலும் குறிப்பாக, சட்டம் - ஒழுங்கு பிரிவில் ஜூனியர் ஆண் ஆய்வாளர்கள் பணியாற்றும் நிலையில், சீனியரான பெண் ஆய்வாளர்களை குற்றப்பிரிவில் நியமிப்பதால் மோதல் போக்கு நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

சாதனை படைக்கும் ‘த்ரீ ரோசஸ்’ - சென்னை காவல் வட்டாரத்தில் ‘த்ரீ ரோசஸ்’ என அறியப்படும் சுகன்யா (சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு), ஜெயசுதா (நுண்ணறிவு பிரிவு), சுபாஷினி (பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு) ஆகிய 3 சகோதரிகளும் ஆய்வாளர்களாக உள்ளனர். இவர்கள் மூவரும் தேசிய, மாநில அளவிலான காவலர் திறனாய்வு போட்டிகளில் ஏராளமான பதக்கங்களை குவித்து தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x