Published : 04 Mar 2023 04:14 AM
Last Updated : 04 Mar 2023 04:14 AM
சென்னை: பரங்கிமலை ராணுவ பயிற்சி அகாடமியில், தீவிரவாதிகளை கண்டுபிடித்து தாக்குவது போன்ற சாகச செயல்களை ராணுவ பயிற்சி அதிகாரிகள், பெண் அதிகாரிகள் செய்து காண்பித்தனர்.
சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமி (ஓடிஏ) கடந்த 1963-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. நாட்டிலேயே இங்கு மட்டும்தான் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த மையம் தற்போது வைர விழா கொண்டாடுகிறது. தவிர, இங்கு பெண் அதிகாரிகளுக்கான பயிற்சி தொடங்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன.
இந்த நிலையில், உலக மகளிர் தினம் வரும் 8-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பெண் ராணுவ பயிற்சி அதிகாரிகளின் திறமையை வெளிப்படுத்தும் நிகழ்வு ராணுவ பயிற்சி அகாடமியில் நேற்று நடந்தது. அதிகாலையில் மூத்த ராணுவ அதிகாரிகள் அணிவகுப்பு பயிற்சியில் ஈடுபட்டனர். பெண் அதிகாரிகளுக்கு எவ்வாறு பயிற்சி அளிக்கப்படுகிறது என்றும் செய்து காண்பிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, சவாலான சூழல்களில் ராணுவத்தினர் எவ்வாறு பணியாற்றுகின்றனர் என்று செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. போர்க்களத்தில் துப்பாக்கியில் தோட்டாக்கள் காலியான பிறகு, கையில் இருக்கும் ஆயுதத்தை வைத்து எவ்வாறு எதிரிகளை தாக்குவது என்பது குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. பின்னர், கிராமங்களில் எதிரிகள் மறைந்திருக்கும் இடத்தை அடையாளம் காட்டுவது, காட்டுப் பகுதியில் பதுங்கியிருக்கும் எதிரிகளை தாக்குவது ஆகிய சாகசங்களையும் வீரர்கள் நிகழ்த்திக் காட்டினர். பின்னர், கண்களை கட்டிக்கொண்டு, துப்பாக்கி பாகங்களை இணைப்பது மற்றும் பிரிப்பது போன்ற பயிற்சியிலும் ஈடுபட்டனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இளம் ராணுவ பயிற்சி அதிகாரி விதார்த்தி பாரதி, ‘‘ராணுவ பணியில் சேர்ந்தது மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் குடும்பத்திலேயே ராணுவ பணியில் சேரும் முதல் தலைமுறை பெண் நான்தான். சட்டப் படிப்பை படித்து தனியார் நிறுவனத்தில் பணியாற்றினேன். பிறகு எஸ்எஸ்பி தேர்வு எழுதி ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். பயிற்சி தொடங்கும்போது முதலில் மிகவும் சிரமமாக இருந்தது. தொடர்ந்து ஈடுபட்ட பிறகு எளிதாகிவிட்டது. ராணுவ அதிகாரியாக பணியாற்ற பெண்கள் அதிக அளவில் முன்வர வேண்டும்’’ என்றார்.
மத்திய பிரதேச மூத்த ராணுவ பயிற்சி அதிகாரி ரேகா சிங் கூறும்போது, ‘‘வீர் சக்ரா விருது பெற்ற என் கணவர் தீபக் சிங், ராணுவத்தில் உதவி செவிலியராக இருந்தார். 2020-ல் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனா நடத்திய தாக்குதலில் வீர மரணமடைந்தார். ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்த நான், ராணுவத்தில் சேர தேர்வு எழுதி வெற்றி பெற்றேன். ஏப்ரலில் எனது பயிற்சி நிறைவு பெறுகிறது. தீவிர பயிற்சியால் என் உடலுடன் மனமும் உறுதியாக இருக்கிறது. 1 கிமீகூட ஓடமுடியாத நான், 40 கிமீ வரை ஓடும் தகுதி பெற்றுள்ளேன்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT