Published : 03 Mar 2023 04:52 AM
Last Updated : 03 Mar 2023 04:52 AM
சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் 2023 ஜனவரி மாதம் கடைசி வாரம் மற்றும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் பெய்த பருவமழையால் பாதிக்கப்பட்டு, 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள நெல் பயிருக்கு உயர்த்தப்பட்ட நிவாரணமாக ஹெக்டேருக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த பிப். 6-ம் தேதி அறிவித்தார்.
முதல்வர் அறிவுறுத்தலின்படி, அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி மற்றும் மதுரை ஆகிய 9 மாவட்டங்களில், வருவாய், வேளாண்மைத் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து, பயிர் சேத கணக்கெடுப்பு மேற்கொண்டனர்.
இதில், 93,874 ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்பட்ட நெல் மற்றும் இதரபயிர்கள், 33 சதவீதத்துக்கும் மேல் சேதமடைந்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நலனைக் கருத்தில்கொண்டு, 1,33,907 விவசாயிகள் பயனடையும் வகையில், 93,874 ஹெக்டேர் பரப்பிலான பயிர்களுக்கு, உயர்த்தப்பட்ட நிவாரணமாக மாநில பேரிடர் நிவாரண நிதி மற்றும் மாநில நிதியிலிருந்து ரூ.112.72 கோடி வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிவாரண உதவித் தொகையை, சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்க விரைவாக நடவடிக்கை எடுக்குமாறும், அலுவலர்களுக்கு முதல்வர் அறிவறுத்தியுள்ளார். இதையடுத்து, பாதிப்புக்கு உள்ளான விவசாயிகளுக்கு, உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT