Published : 03 Mar 2023 07:23 AM
Last Updated : 03 Mar 2023 07:23 AM
சென்னை: நான் தேசிய அரசியலில்தான் இருக்கிறேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். வாக்குஎண்ணிக்கை நடந்து கொண்டிருந்தபோதே, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் குவியத் தொடங் கினர்.
இதையடுத்து, வீட்டிலிருந்த புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், காலை 11 மணியளவில் அண்ணா அறிவாலயம் வந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோர், முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கூறிய தாவது:
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு மாபெரும் வெற்றியைத் தேடித்தந்துள்ள வாக்காளர்களுக்கு, திமுக சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களிடம் வலியுறுத்தினேன்: இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘திராவிட மாடல்ஆட்சிக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்’ என்றுதொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். திராவிட மாடல் ஆட்சியை இன்னும்சிறப்பாக நடத்த வேண்டும் என்றுவிரும்பி, மக்கள் பெரிய வெற்றியைத் தந்துள்ளனர்.
கடந்த 20 மாத திமுகவின் திராவிட மாடல் ஆட்சிக்கு நீங்கள் அங்கீகாரம் தரவேண்டும். இதை இடைத்தேர்தலாக மட்டுமின்றி, இந்த ஆட்சியை எடை போட்டுப் பார்க்கும் தேர்தலாகப் பார்க்க வேண்டும் என்று நான் பிரச்சாரத்தில் பேசினேன். மக்கள் எங்களை எடை போட்டு, இந்த ஆட்சிக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், மிகப் பெரிய வெற்றியைத் தந்துள்ளனர்.
விரைவில் சந்திக்கப் போகும், நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு அச்சாரமாக இந்த இடைத்தேர்தல் அமைந்துள்ளது. இந்த வெற்றிக்காக தொடர்ந்து அயராது பணியாற்றிய அமைச்சர்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள், கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், தொண்டர்கள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், தோழர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இடைத்தேர்தலைப் பொறுத்தவரை, எடைத் தேர்தலாகப் பாருங்கள் என்று நான் கூறினேன். அப்படிப் பார்த்து, மக்கள் நல்ல மதிப்பெண் வழங்கியுள்ளனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில், இதைவிட மிகப் பெரிய வெற்றியை மக்கள் வழங்குவார்கள்.
எங்கள் கொள்கை, நோக்கம்: தேசிய அரசியலுக்கு வரவேண்டும் என்று பரூக் அப்துல்லா வலியுறுத்தியது குறித்து கேட்கிறீர்கள். நான் ஏற்கெனவே தேசிய அரசியலில்தான் இருக்கிறேன். அதில் எந்த மாற்றமும் கிடையாது.
2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, யார்வெற்றி பெற்று பிரதமராக வரவேண்டும் என்பதைவிட, யார் பிரதமராகக் கூடாது, யார் ஆட்சியில் இருக்கக் கூடாது என்பதுதான் இப்போதைக்கு எங்கள் கொள்கையும், நோக்கமும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT