Published : 21 Feb 2023 06:00 AM
Last Updated : 21 Feb 2023 06:00 AM
சென்னை: ‘தி இந்து' நாளிதழின் முன்னாள் ஆசிரியர் ஜி.கஸ்தூரியின் மனைவியும், சுற்றுச்சூழல் சங்க நிறுவனருமான கமலா கஸ்தூரி (89) சென்னையில் நேற்று காலமானார்.
‘தி இந்து' நாளிதழுக்கு நீண்டகால ஆசிரியராக இருந்தவர் ஜி.கஸ்தூரி. இவர் 2012-ம் ஆண்டு காலமானார். இவரது மனைவி கமலா கஸ்தூரி. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதிக ஆர்வம் கொண்டவர். இவர் வயது முதிர்வால் சென்னையில் நேற்று காலமானார்.கமலா குறித்து,கஸ்தூரி அண்டு சன்ஸ் தலைவர் என்.ரவியின் மனைவி சுதா ரவி கூறியதாவது:
கமலா கஸ்தூரி, அவரது தோழிகள் பிரேமா சீனிவாசன், 1984 காலகட்டத்தில் பிரம்மஞான சபையின்தலைவராக இருந்த ராதா பர்னியர்ஆகியோருடன் இணைந்து சென்னையில் சுற்றுச்சூழல் சங்கத்தை நிறுவினார். பிரம்மஞான சபையின் இணை செயலாளராகவும் கமலாஇருந்தார்.
ஏராளமான சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால் காவிரி ஆறு மாசுபடுவதில் இருந்து பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்களை முன்னின்று நடத்தினார். மேலும் அவர் ஏராளமான மரக்கன்றுகள் நடும் பணிகளிலும் தன்னை ஆர்வமுடன் ஈடுபடுத்திக்கொண்டார்.
செங்குன்றம் பகுதியில் இறைச்சிக்கூடம் அமைக்கும் திட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தாக்கல் செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
கமலாவை தனிப்பட்ட முறையில் அறிந்திருந்த, ‘தி இந்து' நிறுவனத்தில் பணியாற்றிய சித்ரா மகேஷ் கூறும்போது, ‘‘இவர் சிறந்தஆன்மிகவாதியாக திகழ்ந்தார். இவரது வாழ்க்கையில் இருந்து நான்கற்ற அனுபவம், அவர் 60 ஆண்டுகளுக்கும் மேலாக எல்லோருடனும் நட்பாக இருந்ததுதான்’’ என்றார்.
கமலாவுக்கு கே.பாலாஜி, கே.வேணுகோபால் ஆகிய இரு மகன்கள், மகள் லட்சுமி நாத் ஆகியோர் உள்ளனர். வேணுகோபால் மற்றும் ஸ்ரீநாத் ஆகியோர் கஸ்தூரி அண்டு சன்ஸ் நிறுவன இயக்குநர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT