Published : 18 Feb 2023 09:20 AM
Last Updated : 18 Feb 2023 09:20 AM
தூத்துக்குடி மாவட்டம் இன்னும் 10 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் துறைமுகம் சார்ந்த போக்குவரத்து வளர்ச்சி குறித்த கருத்தரங்கம் தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் பேசியதாவது:
தூத்துக்குடி மாவட்டம் வளர்ந்து வரும் மாவட்டமாக உள்ளது. இங்கு சாலை, ரயில், ஆகாய வழி, கடல் வழி போக்குவரத்து வசதிகள் உள்ளன. இதனால் பலர் இங்கு முதலீடு செய்ய வந்து கொண்டிருக்கின்றனர். இங்கு சர்வதேச பர்னிச்சர் பூங்கா உள்ளிட்ட பல்வேறு தொழில் வளர்ச்சி சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
தூத்துக்குடி துறைமுகத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்காக 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு வரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விமான நிலைய ஓடுதளம் 1.3 கிலோ மீட்டரில் இருந்து 3.1 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக மாற்றும் பணிகள் நடைபெறுகிறது. புதிய பயணிகள் முனையம் அமைக்கும் பணியும் நடைபெறுகிறது. இந்த பணிகள் முடிக்கப்பட்ட பிறகு பழைய பயணிகள் முனையம் சரக்கு போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும். அதன்பிறகு தூத்துக்குடியில் இருந்து சென்னை, டெல்லி, மும்பைக்கு சரக்குகள் அனுப்புவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
மேலும், நாகப்பட்டினம் முதல் கன்னியாகுமரி வரை கடற்கரை சாலையை ஆறு வழிச்சாலையாக மாற்றுவதற்கு நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளது. குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ளது. இந்த ராக்கெட் ஏவுதளம் அமைந்த பின்னர் ராக்கெட் உபகரணங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தளம் என இரண்டையும் கொண்டுள்ள மாநிலம் என்ற பெருமையை தமிழகம் பெரும்.
தூத்துக்குடியில் தொழிற்சாலைகளின் நீர் தேவையை பூர்த்தி செய்ய 12 மில்லியன் லிட்டர் கொள்ளளவில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தூத்துக்குடியில் மேலும் ஒரு சிப்காட் அமைப்பதற்காக அல்லிகுளத்தில் 2,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் இன்னும் பத்து ஆண்டுகளில் உலக அளவில் மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என்றார் ஆட்சியர்.
கருத்தரங்கில் வஉசி துறைமுக ஆணையத் தலைவர் தா.கி.ராமச்சந்திரன் பேசியதாவது:
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் பெரிய அளவிலான கப்பல்கள் வந்து செல்லும் வகையில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சரக்கு பெட்டக முனையங்கள், சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி போன்ற திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி துறைமுகம் விரைவில் சரக்குப் பெட்டக போக்குவரத்து முனையமாக மாறும். தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பில் வெளித்துறைமுக வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது இன்னும் ஐந்து ஆண்டுகளில் முடிவடையும். இது தவிர உள் துறைமுக வளர்ச்சி திட்டம், வடக்கு சரக்கு பெட்டகமுளையம் உள்ளிட்ட பணிகளும் நடைபெற்று வருகின்றன.
துறைமுகத்தில் 5 மெகாவாட் சூரிய ஒளி மின் திட்டமும், 2 மெகாவாட் காற்றாலை மின் திட்டப் பணிகளும் நடந்து வருகின்றன. கடலில் காற்றாலை மின் உற்பத்தி திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது. துறைமுக வளாகத்தில் தொழிற்சாலைகள் அமைப்பதற்காக நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான தொகை குறைக்கப்பட்டுள்ளது. எனவே தொழில் நிறுவனங்கள் இங்கு வந்து தொழில்களை தொடங்கலாம். துறைமுகத்தில் நடப்பு ஆண்டில் 38 மில்லியன் டன் சரக்கு கையாண்டு கடந்த ஆண்டு விட 12 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
கருத்தரங்கில் துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT