Published : 17 Feb 2023 05:26 PM
Last Updated : 17 Feb 2023 05:26 PM
ராஜபாளையம்: ராஜபாளையம் அய்யனார் கோயில் செல்லும் வழியில் கதிர் அடிக்கும் களத்திற்கு வாகனங்கள் செல்வதற்கு சாலை வசதி இல்லாததால் அறுவடை செய்த நெல் கதிர்களை விவசாயிகள் சாலையில் காயவைத்து உலர்த்தி வருகின்றனர்.
ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற நீர்காத்த அய்யனார் கோயில் உள்ளது. இங்கு மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் பழையாறு, நீராறு ஆகிய இரு ஆறுகள் சேர்ந்து கோயில் அருகே நீர்வீழ்ச்சியாக விழுகிறது. இந்த அய்யனார் கோயில் ஆற்றின் மூலம் 6-வது மைல் நீர்த்தேக்கம், கருங்குளம், முதுகுடி கண்மாய் உள்ளிட்ட பல்வேறு கண்மாய்கள் பாசன வசதி பெறுகின்றன. அய்யனார் கோயில் ஆற்று நீர் மூலம் ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.
ராஜபாளையம் - அய்யனார் கோயில் சாலையில் 6-வது மைல் நீர்த்தேக்கம் அருகே விவசாய பயன்பாட்டிற்காக கதிர் அடிக்கும் களம் அமைந்துள்ளது. இந்தளத்திற்கு அய்யனார் கோயில் ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும். அவ்வாறு செல்வதற்கு சாலை வசதி இல்லாததால் விவசாயிகள் தானியங்களை உலர வைக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
தற்போது ராஜபாளையம் பகுதியில் முதல் போக நெல் அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை களத்தில் உலர வைத்தால், வாகனங்கள் வரமுடியாது என்பதால் சாலையில் உலர வைக்கின்றனர். இதனால் ஏற்படும் தூசியால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
இதுகுறித்து விவசாயி ராமர் கூறுகையில், ‘களத்தில் நெல்லை உலர வைத்தால் வாகனங்கள் செல்ல முடியாது என்பதால் வியாபாரிகள் நெல் வாங்க மறுக்கின்றனர். அதனால் வேறு வழியின்றி சாலையிலேயே அறுவடை செய்யும் தானியங்களை உலர வைக்கின்றோம். களம் இருந்து அதை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளதால் சாலையிலேயே தானியங்களை போட்டு விட்டு இரவு நேரங்களில் சாலையோரம் தூங்குகிறோம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT