Published : 14 Feb 2023 04:20 AM
Last Updated : 14 Feb 2023 04:20 AM
திருநெல்வேலி: மதுரை - திருநெல்வேலி இரட்டை அகல ரயில் பாதை பணிகள் 100 சதவீதம் நிறைவு பெற்றுள்ள நிலையில் ஈரோடு - நெல்லை ரயிலின் வேகம் அதிகப்படுத்த வேண்டும் என்றும் மணியாச்சி - திருநெல்வேலி இடையே ஒரு மணி நேரம் ரயில் நிறுத்தி வைக்கப்படுவதை தவிர்க்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோட்டில் இருந்து கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி வழியாக திருநெல்வேலி வரும் ரயிலின் வேகத்தை அதிகப்படுத்தி இரவு 8.45 க்குள் நெல்லை ரயில் நிலையத்தை அடையும் வகையில் அட்டவணையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று பயணிகள் சங்கங்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றன.
அகல ரயில்பாதை திட்டம் முடிவுக்கு வந்ததும் இது குறித்து பரிசீலிக்கப்படும் என்று ரயில்வே வட்டாரங்கள் பதில் அளித்திருந்தன. திருநெல்வேலி- மதுரை இடையே இரட்டை அகல ரயில் பாதை அமைக்கும் பணியில் திருநெல்வேலி- திருமங்கலம் இடையே 139 கிமீ இரட்டை அகல் ரயில் பாதை பணிகள் முடிந்து பயன்பாட்டில் உள்ளது.
திருமங்கலம் - மதுரை இடையே 17.32 கிலோமீட்டர் தூரத்துக்கு இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட்டு, இப்பாதையில் பெங்களூரு தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் ஆய்வும் செய்துள்ளார்.
நேரத்தை மாற்ற வேண்டும்: மதுரை ரயில் நிலையத்தில் உள்ள மேம்பாட்டு பணிகள் முடிவடைந்த உடன் இன்னும் சில நாட்களில் திருநெல்வேலி - மதுரை இடையே இரட்டை அகல ரயில் பாதையில் ரயில்கள் இயங்கத் தொடங்கி விடும். இந்த இரு பணிகளும் முடிவடைந்தால் கிராசிங்குக்காக ரயில்கள் நிறுத்தப்படும் நிலை இருக்காது.
இரண்டரை மணி நேரத்தில் மதுரையில் இருந்து திருநெல்வேலியை அடைந்து விட முடியும். இந்நிலையில் ஈரோடு - திருநெல்வேலி ரயிலின் வேகத்தை அதிகரித்து இரவு 8.45 மணிக்குள் திருநெல்வேலி ரயில் நிலையத்தை அடையும் வகையில் அட்டவணையில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
இதுகுறித்து ரயில் பயணிகள் கூறும்போது, ‘‘மதியம் 1.35 மணிக்கு ஈரோட்டில் புறப்படும் இந்த ரயிலானது மாலை 5.45 மணிக்கு மதுரைக்கு வந்து பின்னர் அங்கிருந்து மணியாச்சி வரை முழு வேகத்துடன் இரவு 8.15 மணிக்கு வந்தடைந்து விடுகிறது. மணியாச்சியில் இருந்து மீதமுள்ள 29 கிமீ தூரம் திருநெல்வேலியை அடைவதற்கு 1.30 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது.
தினமும் இரவு 9.40 மணிக்கு இந்த ரயில் திருநெல்வேலியை அடைவதால் அங்கிருந்து பேருந்து கிடைக்காமல் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர். இரட்டை அகல ரயில் பாதை பணிகள் 100 சதவீதம் முடிந்துள்ளதால் அட்டவணையில் மாற்றம் செய்து இரவு 8.30 மணிக்குள் திருநெல்வேலியை சென்றடையும் வகையில் இந்த ரயிலை இயக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
நடைமேடை கிடைப்பதில் சிக்கல்: இரவு 8 மணி முதல் 9.30 மணி வரை திருச்செந்தூர், செங்கோட்டை, நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்குள் நுழையும் ரயில்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் நடை மேடை கிடைப்பதிலும் நடைமுறை சிக்கல்கள் உள்ளது.
செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு டீசல் இன்ஜினுக்கு பதில் மின்சார இன்ஜின் திருநெல்வேலியில் மாற்றப்படுவதால் ஒரு நடைமேடையை காலியாக வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. செந்தூர் எக்ஸ்பிரஸ் திருச்செந்தூரிலிருந்து மின்சார இன்ஜினில் இயங்கத் தொடங்கினால் நடைமேடை கிடைப்பதில் சிக்கல் இருக்காது என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT