Published : 31 Jan 2023 04:07 AM
Last Updated : 31 Jan 2023 04:07 AM
சேலம்: சேலம் - ஓமலூர் இடையே நேற்று அதிவேக ரயில் சோதனை ஓட்டம் தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் தலைமையில் நடைபெற்றது.
சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட சேலம் - மேட்டூர் இடையே இருவழிப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. மீட்டர் கேஜ் பாதையை அகல ரயில் பாதையாகவும், இருவழிப்பாதையாகவும் மாற்றிட ரயில்வே நிர்வாகம் சுமார் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்தது. தற்போது, சேலம், ஓமலூர், மேச்சேரி, மேட்டூர் அணை மார்க்கத்தில் இருவழிப் பாதை பணி நிறைவடைந்துள்ளது.
இது மின்வழித்தடமாக மாற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் பணி முடிக்கப்பட்ட, சேலம் - ஓமலூர் வரையிலான 12.3 கிமீ., தூரத்துக்கான இருவழிப்பாதையில் தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. ஓமலூரில் மதியம் 2.51 மணிக்கு புறப்பட்ட ரயில் 121 கிலோ மீட்டர் வேகத்தில் 3 மணிக்கு சேலம் வந்தடைந்தது.
முன்னதாக, தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் நேற்று காலை சிறப்பு ரயிலில் சேலம் வந்தார். சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து ஓமலூர் வரை டிராலி மூலம் அகல ரயில் பாதையை ஆய்வு செய்தார். ஆய்வின் போது தலைமை கட்டுமான நிர்வாக அதிகாரி சி.கே.குப்தா, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீ நிவாஸ், கோட்ட தலைமை பொறியாளர் ராம் கிஷோர், ஒப்பந்ததாரர் கவுதமன் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் உடன் இருந்தனர்.
சேலம்-ஓமலூர் வரையில் நடந்த அதிவேக ரயில் சோதனை ஓட்டத்தை முன்னிட்டு, சுற்றுவட்டார கிராம மக்கள் தண்டவாள பகுதியை கடந்து செல்லாதபடி, ரயில்வே ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
குறிப்பிட்ட நேரத்தில், அதிவேகமாக ரயில் சென்றதையடுத்து, தண்டவாள வழிப்பாதை ரயிலின் வேகத்துக்கு தக்க வகையில் உள்ளதா என்றும் ரயில் வேகமாக செல்லும் போது இடர் பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் குறைபாடுகள் இல்லாத வகையில் உள்ளதா என்பது குறித்தும் தெற்கு ரயில்வே துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இடர்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் குறைபாடுகள் இல்லாத வகையில் ரயில்பாதை உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT