Published : 26 Jan 2023 04:25 AM
Last Updated : 26 Jan 2023 04:25 AM
போடி: போடியில் இருந்து சென்னை செல்ல உள்ள எக்ஸ்பிரஸ் ரயிலில், இதுவரை தேனி மாவட்டத்துக்கான முன்பதிவும் தொடங்கவில்லை. இந்த ரயிலில் பொதுப் பெட்டிகளும் இணைக்கப்படவில்லை. இதனால் பிப்.19-ம் தேதி போடியில் இருந்து கிளம்பும் முதல் ரயிலில், தேனி மாவட்ட மக்கள் பயணிக்க முடியாமல் ‘டாட்டா' காட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
போடி - மதுரை இடையே அகல ரயில் பாதை அமைப்பதற்காக இந்த வழித் தடத்தில் இயங்கிய மீட்டர்கேஜ் ரயில் 2010 டிசம்பரில் நிறுத்தப்பட்டது. தற்போது, மதுரையில் இருந்து தேனி வரை பணிகள் முடிந்து, கடந்த அக்.1 முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
15 கி.மீ. தூர பணி: இந்நிலையில் தேனியில் இருந்து போடி வரையிலான 15 கி.மீ. தூர பணிகள் கடந்த மாதம் முடிவடைந்தன. சோதனை ஓட்டம் முடிந்து, பிப்.19 முதல் போடி வரை ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி மதுரை - தேனி பயணிகள் தினசரி ரயிலும், சென்னை சென்ட்ரல் - மதுரை ஏசி. எக்ஸ்பிரஸ் ரயிலும் போடி வரை நீட்டிக்கப்பட உள்ளது.
இதில் சென்னை ரயில் போடியில் இருந்து ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமை இரவு 8.30 மணிக்கு கிளம்புகிறது. மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், காட்பாடி, பெரம்பூர் ஆகிய நிறுத்தங்கள் வழியே, சென்னை சென்ட்ரலுக்கு காலை 7.55 மணிக்கு சென்றடைகிறது.
முன்பதிவு செய்து...: இதேபோல், மறுமார்க்கமாக சென்னையில் இருந்து திங்கள், புதன், வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணிக்கு கிளம்பி, மறுநாள் காலை 9.35-க்கு போடி வந்தடை கிறது. இந்த ரயிலில் (20601/20602) 4 படுக்கை வசதி பெட்டிகளும், குளிரூட்டப்பட்ட 12 பெட்டிகளும் இருப்பதால் முன்பதிவு செய்து மட்டுமே இதில் பயணிக்க முடியும்.
ஆனால், போடிக்கு ரயில் சேவை அறிவிக்கப்பட்டு 2 வாரங்களுக்கு மேலான நிலையில் இன்னமும் போடி, தேனி உள்ளிட்ட தேனி மாவட்டங்களில் இருந்து இந்த ரயிலில் பயணிப்பதற்கான பயணிகள் முன்பதிவு வசதி தொடங்கவில்லை. அதே வேளையில், இந்த ரயிலில் மதுரை - சென்னை இடையே பயணிப்பதற்கான முன்பதிவு, ஏறத்தாழ நிறைவு பெற்று காத்திருப்போர் பட்டியலுக்கும் சென்று விட்டது.
முன்பதிவற்ற பெட்டிகளும் இணைக்கப்படவில்லை. இதனால் போடியில் இருந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆரவார மாக கிளம்பும் இந்த ரயிலில் தேனி மாவட்ட மக்கள் பயணிக்க முடியாமல் ‘டாட்டா' காட்டும் பரிதாப நிலையே ஏற்பட்டுள்ளது. இந்த ரயிலை வெறுமனே வரவேற்று, வழியனுப்பத்தான் போடிக்கு ரயில் விட்டார்களா என தேனி மாவட்ட மக்கள் வேதனையோடு கேள்வி எழுப்புகின்றனர்.
ஆகவே, ரயிலில் முன்பதிவற்ற பெட்டிகளை இணைக்கவும், முன்பதிவுகளை உடனடியாக தொடங்கவும் உரிய ஏற்பாடு செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், தேனி மாவட்ட பயணிகளின் கோரிக்கை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என்றனர்.
பொதுப்பெட்டிகளை இணைக்க..: திண்டுக்கல்-குமுளி ரயில் பாதை போராட்டக் குழு தலைவர் சங்கரநாராயணன் கூறுகையில், முதல் ரயில் இயக்கம் என்பதால், ஒருவேளை தேதி மாற்றம் ஏற்பட்டு முன்பதிவு செய்தவர்களுக்கு சிரமம் ஏற்படலாம் என்று, முன்பதிவை ரயில்வே நிர்வாகம் தாமதிக்கலாம்.
அடுத்தடுத்த ரயில் இயக்கங்களில் இப்பிரச்சினை சரியாகி விடும். இருப்பினும், பொதுப்பெட்டிகளை இணைக்க வேண்டும். அப்போதுதான் தேனி மாவட்ட மக்கள் திடீர் பயணம் மேற்கொள்ள உதவியாக இருக்கும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT