Published : 19 Jan 2023 06:17 AM
Last Updated : 19 Jan 2023 06:17 AM

ஆதிதிராவிட, பழங்குடியின இளைஞர்களுக்கு விமான நிலையங்களில் வாடிக்கையாளர் சேவை பயிற்சி: சென்னை ஆட்சியர் தகவல்

சென்னை: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு விமான நிலையங்களில் வாடிக்கையாளர் சேவை பயிற்சி வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சு.அமிர்தஜோதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர் களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக, பி.டி.சி. ஏவியேஷன் அகாடமி நிறுவனம் மூலம் விமான நிலையங்களில் வாடிக்கையாளர் சேவை மற்றும் தொடர்புடையை நிறுவனங்களில் பணிபுரிவதற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இப்பயிற்சியை பெற 18 முதல் 25 வயதுக்குட்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு 3மாதங்கள். விடுதியில் தங்கிப்படிக்க வசதி மற்றும் இப்பயிற்சிக்கான மொத்த செலவுத் தொகையான ரூ.20 ஆயிரத்தை தாட்கோ வழங்கும்.

பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும்பட்சத்தில் AASSC (AEROSPACE AND AVIATION SKILL SECTOR COUNCIL)-யால் அங்கீரிக்கப்பட்ட பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். மேலும், இன்டிகோ, ஸ்பைஸ் ஜெட், ஏர்இந்தியா, கோ பர்ஸ்ட், விஸ்த்ரா ஆகிய தனியார் விமான நிறுவனங்களில் பணிபுரியும் வகையில்100 சதவீத வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.

இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோர் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு, சென்னைஆட்சியர் அலுவலகத்தில் உள்ளதாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தையோ, 044 2524 6344, 94450 29456 ஆகிய எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x