Published : 31 Dec 2022 06:34 AM
Last Updated : 31 Dec 2022 06:34 AM
பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர், வரும் தேர்தலில் மக்களை சந்திக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு தேவை யான அடிப்படை வசதிகளை குறையில்லாமல் செய்து தர வேண்டும் என திருப்பத்தூர் நகராட்சி மன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.
திருப்பத்தூர் நகராட்சி மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. நகராட்சி மன்றத் தலைவர் சங்கீதா வெங்கடேஷ் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா முன்னிலை வகித்தார். நகராட்சி பொறியாளர் உமாமகேஸ்வரி, நகரமைப்பு அலுவலர் கவுசல்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
சபியுல்லா (திமுக): திருப்பத்தூர் நகராட்சியில் பல வார்டுகளில் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. எனவே, ஜின்னா ரோட்டில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க வேண்டும்.
குப்பம்மாள் (திமுக): தமிழக அரசு உத்தரவின் பேரில் பகுதி சபா கூட்டம் நடத்தப்பட்டது. அதில், பொதுமக்கள் முன் வைத்த கோரிக்கைகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தலைவர்: இன்னும் 5 வார்டுகளில் பகுதி சபா கூட்டம் நடத்தவில்லை. அனைத்து வார்டு களிலும் பகுதி சபா கூட்டம் முடிந்த பிறகு, பொதுமக்களின் தேவைகள், கோரிக்கைகள் நிறைவேற்ற தீர்மானம் நிறைவேற்றப்படும்.
குப்பம்மாள் (திமுக): 5 வார்டுக்காக 31 வார்டு மக்கள் காத்திருக்க வேண்டுமா? ஏற் கெனவே வார்டுக்குள் செல்ல முடியவில்லை. அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி வாக்களித்த மக்கள் எங்களை கேள்வியால் துளைத்து எடுக் கின்றனர். பொதுமக்கள் அதிருப்தி யில் உள்ளனர். வரும் தேர்தலில் மக்களை சந்தித்து ஓட்டு கேட்க வேண்டுமென்றால், அவர்களுக்கு தேவையான வசதிகளை நிறைவேற்றித் தர வேண்டும். இல்லையென்றால், தேர்தலை எதிர்கொள்வது கடினமாகி விடும். (திமுக ஆட்சி மீது திமுக கவுன்சிலரே மன்ற கூட்டத்தில் பேசியது சலசலப்பை ஏற் படுத்தியது)
தலைவர்: விரைவில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும்.
பிரேம்குமார் (திமுக): திருப்பத்தூர் நகராட்சி முழுவதும் குப்பைக்கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல் படுகிறதா ? என தெரியவில்லை.
சங்கர் ( அதிமுக): வீடு, வீடாக குப்பைக்கழிவுகளை சேகரிக்க தூய்மைப்பணியாளர்கள் வருவ தில்லை. கவுன்சிலரான எனது வீட்டுக்கே 4 நாட்களுக்கு ஒரு முறைதான் ஆட்கள் வருகிறார்கள்.
வெற்றிக்கொண்டான் (திமுக): திருப்பத்தூர் நகராட்சி யில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணிக்காக அனுப்பப்படுவதால் நகராட்சியில் தூய்மைப் பணி மேற் கொள்ள ஆட்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதேபோல, பள்ளிகளில் கழிவறைகளை தூய்மைப்படுத்துவது இல்லை. இதனால், சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது.
சபியுல்லா (திமுக): திருப் பத்தூர் நகராட்சி முழுவதும் நாய் தொல்லை அதிகரித்து வருகிறது. பன்றிகளும் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதையெல்லாம் நகராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டும்.
கோபி (திமுக): 36 வார்டுகளிலும் கொசு மருந்து அடிக்க வேண்டும். வாரத்துக்கு ஒருமுறையாவது கொசு மருந்து தெளிக்க வேண்டும். கழிவுநீர் கால்வாய் தூர்வார வேண்டும். வீடு தோறும் குப்பையை தரம் பிரித்து வழங்க பொதுமக்களுக்கு இரு வண்ணங்களில் கூடை வழங்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT