Published : 29 Dec 2022 04:00 AM
Last Updated : 29 Dec 2022 04:00 AM
கோவை: கோவை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஓடுதளபுனரமைப்புப் பணியில், மழை, பனி உள்ளிட்ட காலநிலை காரணங்களால் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக விமான நிலைய இயக்குநர் தெரிவித்தார்.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் தினமும் 23 விமானங்கள் இயக்கப்படுகின்றன. வெளிநாட்டு போக்குவரத்து பிரிவில் ஷார்ஜாவுக்கு வாரத்தில் ஐந்து நாட்களும், சிங்கப்பூருக்கு அனைத்து நாட்களும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. விமான நிலையங்களில் உள்ள ஓடுபாதை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புனரமைக்கப்படுவது வழக்கம்.
கோவை விமான நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஓடுபாதை புனரமைப்புப் பணிகள் தொடங்கின. இதனால் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, இப்பணி களில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து கோவை விமானநிலைய இயக்குநர் செந்தில்வளவன் கூறியதாவது:கோவையில் விமான ஓடுபாதை 2.9 கி.மீ.நீளத்தில் அமைந்துள்ளது. ஓடுபாதையில் புனரமைப்புப் பணிகள்நடைபெற்று வருவதால், இரவில்விமானங்கள் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தரமான பொருட்களை கொண்டு, வல்லுநர்களின் ஆலோசனைப் படி மிக நேர்த்தியாக ஓடுபாதை புனரமைப்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.இப்பணிக்கு குறிப்பிட்ட வெப்ப நிலை தேவைப்படும். இரவு நேரம் என்பதால் வழக்கமாகவே காற்றின் ஈரப்பதம் அதிகம் இருக்கும். தவிர,மழை மற்றும் பனிக்காலம் தொடங்கியுள்ளதால் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதுவரை20 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன.
மேலும் நான்கு அல்லது ஐந்து மாதங்கள் இப்பணிகள் தொடரும். அதுவரை இரவில் கோவை வான்வெளியை கடக்கும் விமானங்கள், அவசர கால உதவிக்காக தரையிறங்க அனுமதி கேட்டால், அந்த விமானங்கள் மட்டும் தரையிறங்கி செல்ல உதவும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது, என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT