Published : 29 Dec 2022 04:23 AM
Last Updated : 29 Dec 2022 04:23 AM
திருவள்ளூர்: இன்னுயிர் காப்போம்-உதவி செய் திட்டத்தின்கீழ், ‘அலார்ட் கோல்டன் ஆர்மி’ எனும் விபத்தில்லா சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில், முதலுதவி செய்வதற்கான இலவச பயிற்சி வகுப்புகளை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசியதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 27 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது, தமிழகத்தில் இருக்கும் அளவுக்கான மருத்துவக் கட்டமைப்பு, மருத்துவக் கல்லூரி, பல்வேறு மருத்துவ வசதிகள் வேறு மாநிலங்களில் கிடையாது.
தமிழகத்தைப் பொறுத்தவரை சுமார் 12 நிமிடங்களில் மருத்துவ அவசர ஊர்திகள் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று தேவையான மருத்துவ அவசர முதலுதவிகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், பொதுமக்களுக்கும் முதலுதவி பயிற்சி அளிக்கப்படுவதன் மூலம் விபத்துகளில் சிக்கியவர்களை காப்பாற்ற முடியும். இதன் முதற்கட்டமாக, திருவள்ளூர் மாவட்ட கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு முதலுதவி குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
பொது இடங்களில் விபத்துகள் ஏற்பட்டால் ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்னர் செய்ய வேண்டிய முதலுதவி குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இப்பயிற்சி வகுப்பு நடத்தப்படும். இவ்வாறு ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறினார். விழாவில், முன்னதாக ‘அலார்ட் கோல்டன் ஆர்மி’ எனும் இலச்சினையை வெளியிட்டு, முதலுதவி விழிப்புணர்வு குறும்படத்தையும் ஆட்சியர் பார்வையிட்டார்.
இவ்விழாவில், திருவள்ளூர் அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவத்சன், அலார்ட் அறக்கட்டளை இணை நிறுவனர் ராஜேஷ் திரிவேதி, அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT