Published : 28 Dec 2022 06:07 AM
Last Updated : 28 Dec 2022 06:07 AM
சென்னை: அசாம் மாநிலம் குவஹாட்டியில் சாரணர் சாரணியர் மற்றும் என்சிசி படையைச் சேர்ந்த மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து சாரணர் இயக்கம் மற்றும் என்சிசி மாணவ, மாணவிகளில் ஒரு பிரிவினர், பெங்களூருவில் இருந்து அசாம் மாநிலம் நியூ தின்சுகியாவுக்கு செல்லும் விரைவு ரயிலில் முன்பதிவு செய்திருந்தனர்.
விரைவு ரயிலில், பெரம்பூரிலிருந்து 200 மாணவ, மாணவிகளும், திருவொற்றியூரில் இருந்து 36 மாணவர்களும் முன்பதிவு செய்திருந்தனர். மாணவ, மாணவிகளுக்கு அந்த ரயிலின் எஸ்-3, எஸ்-6, எஸ்-7 ஆகிய பெட்டிகளில் தூங்கும் வசதியுடன் இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
பெரம்பூரில் 200 மாணவ, மாணவிகள் ஏறியபோது, அவர்களின் இடங்களில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் முன்பதிவு டிக்கெட்டை காட்டி, எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் என்று கூறியபோதும், அவர்கள் இருக்கைகளைக் கொடுக்க மறுத்தனர். மேலும், மாணவ, மாணவிகளுடன் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக, மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக, மாணவ, மாணவிகளின் பெற்றோர் திருவொற்றியூர் ரயில் நிலையத்துக்கு விரைந்தனர்.
இதற்கிடையில், அந்த ரயில் நேற்று காலை 10.05 மணிக்கு திருவொற்றியூர் ரயில் நிலையத்தை அடைந்தது. அப்போது, முன்பதிவு பெட்டிகளில் அமர்ந்திருந்த வடமாநிலத்தவர்களை அகற்றக் கோரி, அந்த மாணவர்களின் பெற்றோர் அந்த ரயில் முன்பாகச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த, ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் திலீப், கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் மற்றும் போலீஸார், முன்பதிவில்லாத டிக்கெட் எடுத்து பயணித்த வட மாநிலத்தவர்களை ரயிலிலிருந்து இறக்கிவிட்டனர்.
அந்த இருக்கையில் மாணவ, மாணவிகள் அமர வைக்கப்பட்டனர். இதன்பிறகு, முற்பகல் 11:40 மணிக்கு அந்த ரயில் புறப்பட்டுச் சென்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT