Published : 28 Dec 2022 03:30 AM
Last Updated : 28 Dec 2022 03:30 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மம்சாபுரம் பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக விவசாய கிணறுகள் நிரம்பி வழிகின்றன. கண்மாய் மற்றும் வயல்களில் இருந்து வெளியேறும் உபரி நீரால் மம்சாபுரம் செண்பகத் தோப்பு சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக மம்சாபுரம் வாழைகுளம் கண்மாய் ஒரே மாதத்தில் மூன்று முறை நிரம்பி மறுகால் பாய்ந்தது. மேலும் செண்பகத்தோப்பு பேயனாற்றில் தொடர்ந்து நீர் வந்து கொண்டிருப்பதால் மலையை ஒட்டியுள்ள கண்மாய்கள் மற்றும் விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மம்சாபுரதம் முதலிப்பட்டி கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. மேலும் அவ்வப்போது தொடர் மழை பெய்து வருவதால் விவசாயிகள் கிணற்று நீரை பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படவில்லை.
இதனால் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் விவசாய கிணறுகள் நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது. மம்சாபுரம் - செண்பகத்தோப்பு சாலையில் கண்மாய், வயல்கள் மற்றும் கிணறுகளில் இருந்து வெளியேறும் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சாலையில் தண்ணீர் வெள்ளம் போல் ஓடுவதால் மக்கள் சிரமப்படுகின்றனர். உபரி நீர் செல்லும் கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT